தமிழக சட்டசபை தேர்தல் வரலாறு (2021)- மு.க.ஸ்டாலின் ஆட்சி
1 min read
Tamil Nadu Assembly Election History (2021)- M.K. Stalin’s rule
19.4.2026
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 16-வது தேர்தல் உலகமே அனுபவித்த கொரோனா என்னும் கொடுங்காலத்துக்கு மத்தியில் நடந்தது.
2020ல் தொடங்கிய கொரோனா பரவல் அடங்குவதும் நீடிப்பதுமாக இருந்த நிலையில் 2021 ஏப்ரல் 6ல் தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தது. வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கு மத்தியில் களம் கண்ட அணிகளைப் பார்ப்போம்.
கலைஞரின் மறைவுக்குப் பின் கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் திமுகவை மேலும் வலுவான அமைப்பாக வைத்திருந்ததால் அவர் தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இரு கம்யூனிஸ்டுகள், விசிக, மு.லீக் உள்ளிட்ட 13 கட்சிகள் அணி திரண்டன.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் சிதறிய அதிமுகவின் தலைமையை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றி பாஜகவுடன் அணி அமைத்தார். இதில் பாமக, தமாகா உள்ளிட்ட 10 கட்சிகள் இடம் பெற்றன.
விஜயகாந்தின் தேமுதிகவும், தினகரனின் அமமுகவும் மற்றொரு அணியாக களம் இறங்கின.
கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து இன்னொரு அணி கண்டன. இவர்களுக்கு மத்தியில் சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனியாக களம் இறங்கியது.
இத்தனை அணிகள் கோதாவில் குதித்த போதிலும், திமுக-அதிமுக அணிகள் இடையே தான் உண்மையான போட்டி நிலவியது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பிரசாரம் பிற கட்சிகளை
பின்னுக்குத்தள்ளி முன்னணியில் இருந்தது. அவருடைய மகனும், திமுக இளைஞர் அணிச்செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் அவரது பாணி பிரசாரத்தால் மக்களை கவர்ந்தார். வாக்குப்பதிவுக்கு முன்பே திமுக அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்பது உறுதியாகத் தெரிந்தது.
தேர்தல் நாளன்று 73.83 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்தே வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் திமுகழகம் எதிர்பார்த்தது போலவே அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. திமுக 133, காங்18, சிபிஐ 2, விசிக 4, சிபிஎம் 2 என மொத்தம் 159 இடங்களை வென்றது.
அதிமுக 66, பாமக 5, பாஜக 4 என அந்த அணி 75 இடங்களை கைப்பற்றியது.
கோவை, சேலம், தர்மபுரி அடங்கிய மேற்கு மண்டலம் அதிமுகவுக்கு கூடுதல் இடங்களை அள்ளிக்கொடுத்தது.
2011-ல் அதிமுகவிடம் ஆட்சியை இழந்த திமுக, 10 ஆண்டுகள் கழித்து அதிமுகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. கொரோனா பரவல், ஊரடங்கு என சூழல் மோசமாக இருந்த காலகட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மே 7, 2021ல் முதல்-அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார்.
அவர் பதவி ஏற்கும் போது, திருவாரூர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்….என்று கூறி பதவி ஏற்றது நாட்டு மக்களை உற்று நோக்க வைத்தது.
ஆட்சியில் அமர்ந்ததுமே, மகளிர் விடியல் பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா கால நிதியாக மக்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்பது என அவர் முதல் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிவிப்புகள் இன்று வரை
பேசப்படுகின்றன.
எனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காதவர்களும் இவருக்கு வாக்களிக்கத் தவறி விட்டோமே என எண்ணும் அளவுக்கு என்செயல்பாடுகள் இருக்கும் என்று அறிவித்தபடியே அவருடைய 5 ஆண்டு ஆட்சியில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றிய கையோடு 2026 தேர்தலையும் எதிர்கொள்ள, திருவாரூர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திருவாரூரில் தொடங்கி மக்கள் சந்திப்பை நடத்திக்கொண்டு இருக்கிறார்.
2021 தேர்தல் கண்ணோட்டம்
மொத்த வாக்குகள் 6,29,43,693
பதிவானவை 4,63, 44,590 (73.63%)
திமுக (மதிமுக, கொமதேக, தவாக உள்பட) 133 (1,74,30,179; 37.70%)
காங் 18 (19,76,527; 4.27%)
சிபிஐ 2 (5,04,537; 1.09%)
விசிக 6 (4,57,763; 0.99%)
சிபிஎம் 2 (3,90,819; 0.85%)
மு.லீக் 0 (2,22,263; 0.48%)
திமுக அணி 159 (2,09,82,088; 45.38%)
அதிமுக 66 (1,53,91,055; 33.29%)
பாமக 5 (17,58,774; 3.80%)
பாஜக 4 (12,13,670; 2.62%)
அதிமுக அணி 75 (1,83,63,499; 39.71%)
நாம் தமிழர் 0 (30,42,307; 6.58%)
அமமுக+தேமுதிக 0 (13,17,336; 2.85%)
மநீம 0 (12,10,667; 2.62%)
சமக 0 (7650; 0.02%)
ஸ்டாலின் குவித்த தொடர் வெற்றிகள்
2016ல் திமுகழகம் ஆட்சியைப்பிடிக்க முடியாமல் போனாலும் தமிழக வரலாற்றிலேயே ஓர் எதிர்க்கட்சியாக அதிக இடங்களை (89) பிடித்த பெருமை பெற்றது. ஆளும் கட்சியாக 184 இடங்களை 1971ல் வென்றது
போல் எதிர்க்கட்சியாகவும் சாதனை படைத்த கட்சியாக திமுக பெயர் வாங்கியது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கலைஞரும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மறையவும் தமிழக அரசியலில் வெற்றிடம் தோன்றி விட்டது என்று சிலர் பேசத்தொடங்கினர். அப்படியே அது வெற்றிடமாக இருந்தாலும் காற்று மண்டலத்தில் வெற்றிடத்தைச் சூழ்ந்து கொண்டு புயல் உருவாகுவதைப்போல் தமிழ்நாட்டு தேர்தல் அரசியலில் புயலாகத் தோன்றினார், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின். 2019 நாடாளுமன்றத்தேர்தலில் அவர் அமைத்த கூட்டணி புயலாக வீசி அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக அணியை துவம்சம் செய்தது.
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40க்கு 39 இடங்களை திமுக அணி அள்ளியது. தேனி மட்டும் அதிமுக வசம் சென்றது.
அது மட்டுமல்ல, வாக்கு வித்தியாசத்தில் திமுக அணி வேட்பாளர்கள் சாதனை நிகழ்த்தினர். திண்டுக்கல்லில் (வேலுச்சாமி-திமுக) 5.38 லட்சம், திருச்சியில் (திருநாவுக்கரசர்-காங்) 4.59 லட்சம், ஸ்ரீபெரும்புதூரில் டிஆர்
பாலு-திமுக) 4.84 லட்சம், வடசென்னையில் (கலாநிதி வீராசாமி-திமுக) 4.61 லட்சம் என கூடுதல் வாக்குகளைப்பெற்று வென்றனர்.மற்ற தொகுதிகளிலும் வாக்கு வித்தியாசம் 2 லட்சம், 3 லட்சம், 4 லட்சம் என திமுக அணி வாக்குகளை குவித்து இருந்தது. பாமக வலுவாக உள்ள
தருமபுரியில் மட்டும் திமுக 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றது.
மேலும் சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் புதிய சின்னமான பானையில் போட்டியிட்டு 3219 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார்.
திமுக அணி வாக்குகள் 2,27,89,020; 53.15%
அதிமுக அணி வாக்குகள் 1,33,07,139; 30.56%
இது மட்டுமல்ல; இதே நாடாளுமன்றத்தேர்தலுடன் 22
சட்டமன்றத்தொகுதிகளுக்கு மினி பொதுத்தேர்தலாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அரவாக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம்,
திருவாரூர், பெரம்பூர், பூந்தமல்லி, ஆண்டிப்பட்டி, ஆம்பூர், குடியாத்தம், திருப்போரூர், ஓசூர், பெரியகுளம், தஞ்சாவூர் ஆகிய 13 தொகுதிகளை திமுக வென்று சட்டமன்றத்தில் அதன் பலம் 100ஐத் தாண்டியது.
அதிமுக, சூலூர், விளாத்திகுளம், பாப்பிரெட்டிபட்டி, சோளிங்கர்,
நிலக்கோட்டை,அரூர், பரமக்குடி, சாத்தூர், மானாமதுரை ஆகிய 9 தொகுதிகளைப்பிடித்தது.
அடுத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த ஊரக
உள்ளாட்சித்தேர்தலில் 60 சதவீத இடங்களை திமுக கூட்டணி
கைப்பற்றியது. இந்த தொடர் வெற்றியின் நாயகனாக விளங்கிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்டமாக 2021 சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார்.
-(கட்டுரைத் தொகுப்பு: மணிராஜ்)