கொடைக்கானலுக்கு 2 நாட்கள் கட்டணமின்றி செல்லலாம்
1 min read
You can go to Kodaikanal for 2 days free of charge.
1.5.2026
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் கடந்த ஜனவரி 12-ம் தேதி முதல் ஒரே இடத்தில் ‘கியூஆர் கோடு’ மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால் விடுமுறை நாட்களில் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தற்போது கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றனர். அதனால் கொடைக்கானல் நகர் மற்றும் அனைத்து சுற்றுலா இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் முறை தொடர்வதால் அப்பகுதியை சுற்றுலா வாகனங்கள் கடந்து செல்ல குறைந்தது 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரமாகிறது.
அதனால் மலைச்சாலையில் வாகனங்கள் 15 கி.மீ., தூரத்துக்கும் மேல் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அன்றாட பணிகளுக்கு செல்லும் உள்ளூர் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (01.05.2026) காலை முதல் வனத்துறை நுழைவு கட்டணம் வசூலித்து வரும் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே சுற்றுலா வானங்களை நிறுத்தி வைத்தனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாமல் தவித்தனர். தற்போது பலர் வாகனங்களிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளை (02.05.2026), நாளை மறுநாள் (03.05.2026) தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கத்துக்கு கட்டணமின்றி செல்லலாம் என்று அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் ஆன்லைன் கட்டண வசூலிப்பு முறையால் காலதாமதம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி, வாடகை வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.