June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்

1 min read

Agni Nakshatra starts tomorrow: Warning to the public

3/5/2026
தமிழகத்தில் ஏற்கெனவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் நாளை (4-ந்தேதி) தொடங்குகிறது. கோடை காலத்தின் உச்சபட்ச வெயில் தாக்கம் என்பது இந்த கால கட்டத்தில்தான் இருக்கும். வருகிற 28-ந்தேதி வரை அதாவது 24 நாட்கள் வெயில் கோர தாண்டவமாடும்.

இந்த ஆண்டு அக்னி காலத்தில் 110 டிகிரி வரை வெயில் கொளுத்தலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த கால கட்டத்தில் 6 முறை வெப்ப அலைகள் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்த கால கட்டத்தில் உஷாராக இருக்கும்படி பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

அக்னி வெயிலில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

வெயிலின் உக்கிரமான தாக்கததால் ‘ஹீட்ஸ்டிரோக்’ (வெப்ப வாதம்) ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஏற்கனவே கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானவர்கள் வெப்ப வாதத்தின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். பலர் இறந்தும் இருக்கிறார்கள்.

எனவே கவனமாக இருக்க வேண்டும். கண்டிப்பாக வெளியே செல்ல வேண்டியவர்கள் முன்னேற்பாட்டுடன் செல்ல வேண்டும். குடைபிடித்தபடி செல்வது, நிறைய தண்ணீர் குடிப்பது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

கோடை வெயிலில் அலையும்போது உடலில் நீர் சத்து குறைய வாய்ப்பு உண்டு. எனவே நீர் சத்து குறையாதபடி தண்ணீர், இளநீர், தர்பூசணி, பழச்சாறுகளை அடிக்கடி குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளார்கள். மேலும் காரமான உணவு வகைகளை தவிர்க்கும்படியும் கேட்டுக் கொண்டு உள்ளார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *