தூத்துக்குடி- குளத்தில் மூழ்கி அரசு ஐ.டி.ஐ. மாணவர் சாவு
1 min read
Thoothukudi- Government ITI student dies after drowning in pond
5.5.2026
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ள வரதராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாசானமுத்து. இவரது மகன் மாரிச்செல்வம் (வயது 19), தூத்துக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சிப் பள்ளியில் (ஐ.டி.ஐ.) 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்களில் தனது தந்தைக்கு உதவியாக மாரிச்செல்வம் ஆடு மேய்க்கச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி விடுமுறை என்பதால், மாரிச்செல்வம் ஆடுகளை உமரிக்கோட்டை கிராமத்தில் உள்ள குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். குளத்தில் ஆடுகளைக் குளிப்பாட்ட முயன்றபோது, ஆடுகள் அனைத்தும் மொத்தமாக ஆழமான பகுதியை நோக்கிச் சென்றுள்ளன. அவற்றைப் பிடிக்கச் சென்ற மாரிச்செல்வத்திற்கு நீச்சல் தெரியாததால், எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தட்டப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் தேடி மாரிச்செல்வத்தை மீட்டனர். உடனடியாகஅவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாரிச்செல்வம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறை நாளில் தந்தைக்கு உதவியாக சென்ற மாணவர் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.