மேற்கு வங்காளத்தில் வீட்டு வேலை செய்த பெண் எம்.எல்.ஏ. ஆனார்
1 min read
A woman who worked as a domestic worker in West Bengal became an MLA.
6.5.2026
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடைய உள்ள சூழலில், மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டது. வரலாறு காணாத வகையில் 2 கட்ட தேர்தலிலும் 90 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில், வீட்டு வேலை செய்து குடும்பம் நடத்தி வரும் பெண்மணி ஒருவர் எம்.எல்.ஏ.வாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். பா.ஜ.க. சார்பில் ஆஸ்கிராம் தொகுதியில் காளிதா மஜ்ஜி என்பவர் போட்டியிட்டார். அவர் 1 லட்சத்திற்கும் கூடுதலான வாக்குகளை பெற்றார். 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷியாம பிரசன்ன லோஹரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலிலும் போட்டியிட்ட மஜ்ஜிக்கு 11,815 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட்டது. ஆனால், பா.ஜ.க. அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி தேர்தலில் நிறுத்தியது. இந்த முறை அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் அளித்த பேட்டியில், எனது பெயரை அறிவித்தபோது, 2 வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தேன். மாதம் ரூ.4,500 வருவாய் ஈட்டினேன்.
காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து, உடனடியாக வேலையை தொடங்கி விடுவேன் என கூறினார். சிலர் வீடுகளில் மஜ்ஜியை தங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவே பார்த்துள்ளனர்.
அவர், பிரசாரத்திற்கு சென்றதும், அவர் வேலை செய்து வந்த வீடுகளில் அன்றாட வீட்டு வேலை செய்ய ஆளில்லாமல் குடும்பத்தினர் தவித்தனர். அப்போது, அவருடைய வேலையை பாராட்டி பேசி வந்துள்ளனர்.
அவருடைய தேர்தல் பிரசாரத்திற்கு மகன் பார்த்தாவும் உதவியாக இருந்துள்ளார். வேலை செய்யாதபோதும், அவருக்கான சம்பளம் வந்து விடும் என வேலை செய்த வீட்டினர் தெரிவித்துள்ளனர் என மஜ்ஜி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேற்கு வங்காளத்தில் இந்த தேர்தலில் பாரம்பரிய அரசியலுக்கு முக்கியத்துவம் இல்லாமல், அன்றாட வாழ்க்கை முறையில் ஈடுபட்டு உள்ள வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து உள்ளனர் என்பது மஜ்ஜியின் வெற்றி பிரதிபலிக்கின்றது.