‘வந்தே மாதரம்’ பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min read
Union Cabinet approves ‘Vande Mataram’ song to be given status equivalent to national anthem
7.5.2026
நம் நாட்டின் தேசிய பாடலான, ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு, தேசிய கீதமான, ‘ஜன கண மன’விற்கு இணையான அந்தஸ்து வழங்கும் முன்மொழிவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
மேற்கு வங்க கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, 1875 நவ., 7ல், ‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றினார். இது, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தது.
இது, நாட்டின் தேசிய பாடலாக, 1950 ஜன., 24ல் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.
உத்தரவு இந்த பாடல் இயற்றப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சில மாதங்களுக்கு முன், பார்லி.,யில் சிறப்பு விவாதமும் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாக, வந்தே மாதரம் பாடல் கட்டாயம் இசைக்க வேண்டும் என, கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டில்லி யில் நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து வழங்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய கீதத்தை பாதுகாக்கும் அதே சட்டத்தின் கீழ், வந்தே மாதரம் பாடலையும் கொண்டு வர, தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜூலை – ஆகஸ்டில் நடக்கும் பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில், இந்த திருத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தண்டனை இதன்படி, இனி மேல் வந்தே மாதரம் பாடப்படும் போது அதற்கு அவமதிப்பு செய்தாலோ அல்லது இடையூறு விளைவித்தாலோ அது ஜாமினில் வெளியே வர முடியாத குற்றமாகக் கருதப்படும்.
அவமதிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் அதே குற்றத்தை செய்வோருக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறை தண்டனை வழங்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.