“தவறு செய்ய விடமாட்டேன்”- முதல்வர் விஜய் முதல் பேச்சு
1 min read
“I will not let you make a mistake” – Chief Minister Vijay’s first speech
10.5.2026
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் பெண்கள் பாதுகாப்பு கருதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைபொருட்கள் குற்றம் தடுக்க அனைத்து மாநகரங்களில் போதைபொருள் தடுப்பு பிரிவு உருவாக்குதல் என புதிய ஆணையில் கையெழுத்திட்டார்.
பிறகு முதல்வர் விஜய் பேசியதாவது:-
சினிமாவில் கஷ்டப்பட்டு வெற்றி அடைய வேண்டும் என்று இருந்த சாதாரண உதவி இயக்குநருக்கு பிறந்த பிள்ளையாக, எனக்கும் வாழ்க்கையில் வறுமை, பசி என நல்லாவே தெரியும். நான் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உங்கள் பிள்ளை மாதிரியாக, மகன் மாதிரி, அண்ணன் மாதிரி, தம்பி மாதிரி தான் உணர்கிறேன். நீங்களை என்னை அப்படி நினைத்ததால் தான் சினிமாவில் எனக்கு மிகப்பெரிய இடத்தை கொடுத்தீர்கள்.
அதை எல்லாம் விட்டு விட்டு மக்களுக்கு நன்றி கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்துள்ளேன். இந்த விஜயை, நாங்கள் எல்லாம் இருக்கிறோம் வா பாத்துகிறோம் என்று அவ்வளவு அன்பாக, உறவாக என்னை ஏற்றுக்கொண்டீர்கள். இந்த நேரத்தில் இதனை நான் சொல்ல வேண்டும். இந்த பயணத்தில் கஷ்டங்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டேன். எனக்காக கூட நின்ற உங்களுக்கும் ஏற்பட்ட அவமானங்கள், கஷ்டங்களை பொருட்டாக எடுத்து கொள்ளாமல் என்னுடைய வேதனைகளை உங்களுடையதாக நினைத்து நின்றதால், “ஜோசப் விஜய் எனும் நான்” அதனை உண்மையாக்கி இருக்கிறீர்கள்.
இதனை என்ன சொல்றது என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய உறவுகளே, சொந்தங்களே, நான் ஒன்றும் தேவ தூதன் கிடையாது. நான் இயல்பான வாழ்க்கை வாழும் சாதாரண மனிதன் தான். நான் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற மாட்டேன். எது சாத்தியமோ அது மட்டும் தான் செய்வேன்.
சாத்தியமில்லாதவற்றை செய்யமாட்டார்களாக என்று ஒரு கேள்வி உங்கள் மனதில் வரலாம். இத்தனை கோடி மக்கள் என் கூட இருக்கும் போது ஏது வந்தாலும் பார்த்து கொள்ளலாம். என்ன வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனது மனதில் இருக்கிறது.
இன்றைக்கு தமிழக அரசு இருக்கும் நிலைமையை பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும். 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி வைத்து விட்டு போய் இருக்கும் போது, கஜானானை சுத்தமாக துடைத்து வைத்துவிட்டு போய் இருக்கும் போது, சுமையை ஏத்தி வைத்து விட்டு போய் இருக்கும் போது, அப்படிப்பட்ட சூழலில் தான் நாம் இந்த பொறுப்பை கையில் எடுத்து இருக்கிறோம். உள்ளே போய் பார்த்தால் தான் ஏது எந்த நிலைமையில் இருக்கிறது என்று தெரியும். அதனை எல்லாம் பார்த்து விட்டு உங்களுக்கு அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.
யாரைவாவது சந்திக்க வேண்டும் என்றால் முகத்தை மூடி கொண்டு சந்திக்காமல், வெளிப்படையாக, ஒளி மறைவு இல்லாமல் வெளிப்படையாக தான் செய்வேன். இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்து இருக்கிறீர்கள்.
அதேபோல போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒளிவு மறைவு இன்றி நிர்வாகத்தை நடத்துவேன். நான் சொன்னதை எல்லாம் படிபடியாக நிறைவேற்றுவேன். நீங்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் எனக்கு உதவியாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்கும்.
இது உங்களுடைய ஆட்சி, பெண்கள் பாதுகாப்பை கண்டிப்புடன் வைத்து இருப்பேன். போதை பொருள் கலாசாரத்திற்கு தடுக்க இன்றைக்கு இருந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுப்பேன். நமது பசங்களை அதில் இருந்து காப்பாற்ற வேண்டியது நமது அரசின் பொறுப்பு. சட்டம் ஒழுங்கு, எல்லோருக்கும் பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவேன். என்னை அவமானப்படுத்தியவர்களாக இருந்தாலும் அவங்களும் என்னுடைய மக்கள் தான்.
நண்பர்களாக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தானே, அடிப்படை வசதிகளில் எனது முழு கவனத்தை செலுத்துவேன். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாகூட தொட மாட்டேன், எனக்கு அவசியமும் இல்லை. இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான், தப்பு செய்யவிடவும் மாட்டான். ஜெயித்துவிட்டோம் என ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். ஆட்டம் ஆடுவோம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இந்த நிமிடமே அழித்துவிடுங்கள். ஒரே பவர் செண்டர் அதுநான் தான்.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள் எல்லோரும் தவெக அரசில் நல்லாயிருப்போம்; சிறுபான்மையினருக்காக தவெக அரசு துணை நிற்கும். உங்களுக்கு அதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம்களுக்கான முகம் தான் இந்த விஜயின் முகம்.
அதில் 100 சதவீதம் இந்த விஜயை நம்பலாம், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு நன்றி. இந்த விஜய் மாமாவோட குட்டி நண்பா, நண்பீஸ்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்; உங்களாலதான் இது நடந்துருக்கு. உங்களுடைய எதிர்காலத்தை மனதில் வைத்து கொண்டு எல்லா நல்ல விஷயங்களையும் விஜய் மாமா செய்து கொடுப்பான்.
நம்பிக்கையுடன் இருங்கள், தமிழக வெற்றிக்கழக கட்சியினரை நான் எப்படி மறப்பேன். நீங்கள் இல்லை என்றால் எதுவுமே இல்லை. கட்சியினருக்கு, நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். இது புதிய தொடக்கம், புதிய சகாப்தம். சமூக நிதியை நிலைநாட்டு அரசு தொடங்கியது, நமது அரசுக்கு ஆதரவு வழங்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி.
ஆதரவளித்த கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், விசிக கட்சியினரை வருக..வருக என்று வரவேற்கிறேன். இந்த மாதிரியான நேரத்தில் குரல் கொடுத்ததுக்கு நன்றி. நம்பிக்கையோடு இருங்கள்; நல்லதே நடக்கும். மீண்டும், மீண்டும் சந்திப்போம். இவ்வாறு விஜய் பேசினார்.