தமிழக அமைச்சர்கள் பற்றிய அரசியல் குறிப்பு
1 min read
Political note about Tamil Nadu ministers
10.5.2026
தமிழக அமைச்சரவையில் இன்று பதவியேற்ற விஜய் தவிர, அமைச்சர்கள் 9 பேரும் பதவியேற்றுள்ளனர். இவர்கள் பற்றிய விவரம் வருமாறு:
ஆனந்த்: புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த், ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். முன்னாள் அமைச்சர் அஷ்ரப் இடம் உதவியாளராக இருந்தவர், விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் இருந்தார். 2006 சட்டசபை தேர்தலில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் புஸ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உப்பளம் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார்.
அதன்பிறகு விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய பொறுப்பாளர் என்ற நிலைக்கு வந்தார்.
விஜய்க்கு அரசியலில் ஆன் இன் ஆல் எல்லாமே ஆனந்த் தான். கட்சி தொடங்கியது முதலே தவெகவின் பொதுச்செயலாளராக இருக்கிறார். கல்வித்தகுதி: 9ம் வகுப்பு.
ஆதவ் அர்ஜூனா: வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகளை திருமணம் செய்துள்ளார். இதற்கு முன் விசிகவில் இருந்தார். திருமாவளவனை தன் ஆசான் என்று கூறக்கூடியவர்.
விசிகவில் இருந்தபோது கட்சி கட்டுப்பாட்டை மீறி பேசியதற்காக நடவடிக்கைக்கு ஆளானவர். இதனால் அங்கிருந்து விஜய் கட்சியில் வந்து சேர்ந்து, அந்த கட்சியின் முக்கிய புள்ளியாக மாறி விட்டார். ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ என்ற தேர்தல் உத்தி வகுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
செங்கோட்டையன்: முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், இப்போது 10ம் முறையாக சட்டசபைக்கு தேர்வாகியுள்ளார். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. ஜெயலலிதா, இபிஎஸ் அமைச்சரவைகளில் இருந்தவர்.
வனம், போக்குவரத்து, விவசாயம், கல்வித்துறைகளை கவனித்தவர். தேர்தலுக்கு முன்னதாக கட்சி மாறி தவெகவில் இணைந்தார். கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
அருண்ராஜ்: சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர், அடிப்படையில் ஒரு மருத்துவர். சென்னை மருத்துவக் கல்லுாரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற இவர், தமிழக அரசில் கிராமப்புற மருத்துவராக பணியாற்றினார். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று வருமான வரித்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். விருப்ப ஓய்வு பெற்று தவெகவில் இணைந்தவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
வெங்கட்ரமணன்: சென்னையை சேர்ந்தவர். மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், நீண்ட காலமாக விஜயின் நிதி தொடர்பான விவகாரங்களை கவனித்து வருபவர். கட்சியின் பொருளாளராகவும் இருக்கிறார். பிராமண சமூகத்தை சேர்ந்தவர். ஆடிட்டர். எம்.காம்., எம்பிஏ (நிதி) பட்டம் பெற்றவர்.
நிர்மல்குமார்: பிஇ, எல்எல்பி, எம்.ஏ., பட்டம் பெற்றவர். திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடக்கத்தில் பாஜக வில் இருந்த இவர், அங்கிருந்து அதிமுகவுக்கு தாவினார். இந்த கட்சிகளின் ஐடி விங் செயல்பாடுகளில் முக்கிய பங்களித்தவர். பின்னர் அதிமுகவில் கசப்பு ஏற்பட்டு விஜய் கட்சியில் இணைந்தார். விஜய் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்.
ராஜ்மோகன்: பி.டெக் பட்டதாரியான இவர், எழும்பூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். பேச்சுத்திறமை கொண்ட ராஜ்மோகன், யூடியூப் தளங்கள் நடத்தி பிரபலமானவர். திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட எழும்பூர் தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்.
பிரபு: காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற இவர், பல் மருத்துவர். தொகுதியில் சமூக சேவை செய்தும், சமூக வலைதளங்களின் மூலமும் பிரபலமானவர்.
கீர்த்தனா: விஜய் அமைச்சவைரயில் ஒரே பெண் அமைச்சராக சிவகாசியை சேர்ந்த 29 வயது கீர்த்தனா பொறுப்பேற்றுள்ளார். இவர் தந்தை பெயர் சம்பத், விவசாயம் செய்கிறார். தாய் விஜயலட்சுமி இல்லத்தரசி. இந்து கம்மவார் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். பாண்டிச்சேரி பல்கலையில் எம்.எஸ்.சி., புள்ளியியல் பயின்றார். இவர் தேர்தல் வியூக வகுப்பு நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் 2021ல் பிரசாந்த் கிஷோரின் ஐபேக்கில் அரசியல் ஆலோசகராக தி.மு.க.,விற்காக பணியாற்றினார். தொடர்ந்து ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுக்கும், கோவாவிலும் தேர்தல் பிரசாரங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் சரளம்.