August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

நீட் தேர்வை ரத்து செய்க; மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்

1 min read

Cancel NEET exam; Chief Minister Vijay urges the central government

13.6.2026
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய தேர்வு முகமை மூலம் 2026-ம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு, கடந்த 3-ந்தேதி அன்று 5,432 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 31 நகரங்களில் இத்தேர்வு நடைபெற்றது. சுமார் 1.4 லட்சம் தமிழக விண்ணப்பதாரர்கள் உட்பட, 22,05,035 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர்.

வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்திய அரசின் ஒப்புதலுடன், தேசிய தேர்வு முகமை தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துள்ளது. மேலும், இவ்விவகாரம் விசாரணைக்காக மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ரத்து நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவ படிப்பு ஆர்வலர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது.

நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2024-ஆம் ஆண்டிலும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக 6 மாநிலங்களில் எப்.ஐ.ஆர்.-கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு, 95 விரிவான சீர்திருத்த பரிந்துரைகளை வழங்கியது. இவை அனைத்தையும் மீறி, இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளதோடு, நீட் தேர்வும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவிலான ஒரு தேர்வில் உள்ள குறைபாடுகளுக்கும், கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளுக்கும் இதுவே உறுதியான சான்றாகும்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, தமிழ்நாடு அரசு அதனை தொடர்ந்து மற்றும் ஒருமித்த குரலில் எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக, கிராமப்புறங்கள், அரசு பள்ளிகள், தமிழ்வழி பயிற்றுமொழி பின்னணிகள் மற்றும் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசின் நீண்ட நாள் கோரிக்கையான, தேர்வை முழுமையாக ரத்து செய்யவும், எம்.பி.பி.எஸ்., பி.எடி.எஸ். மற்றும் ஆயூஷ் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்கவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *