June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

பழைய குற்றாலம் அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது- இராம.உதயசூரியன் கோரிக்கை

1 min read

Rama Udayasooriya demands that the old Courtallam should not be handed over to the forest department.

13.5.2026
இராமநதி ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்ட செயல்பாட்டு குழு அமைப்பாளர் இராம.உதயசூரியன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்தக் கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தின் பெருமைகளில் குற்றால அருவிகளும் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் பல அருவிகள் மக்கள் நீராடுவதற்கும், விவசாயம் செழிக்கவும் பயன்படுகிறது. குற்றால பிரதான அருவியைப்பொல் மக்கள் மகிழ்ச்சியோடு குளித்து ஆனந்தம் கொள்ளும் இடமாகவும், 25-க்கும் மேற்பட்ட குளங்களின் மூலம் சுமார் 10,000 ஏக்கர் வரை பாசம் பெரும் நீர் ஆதாரமாகவும் விளங்குவது பழைய குற்றாலம் அருவியாகும். இது ஆயிரப்பேரி என்னும் கிராம ஊராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ளது. பாதுகாப்பு அம்சம் நிறைந்த அருவி இது ஆகும். ஆண்டுதோறும் இங்கு உள்ளூர், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளை சார்ந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். அதன் மூலம் ஊராட்சிக்கு வருவாய் ஏற்பட்டு மக்களின் அடிப்படை வசதிகளுக்கு பயன்பட்டு வருகிறது.

இந்த அருவி இயற்கையில் மலை உச்சியில் இருந்து செங்குத்தாக தரையில் வழுந்து பின் அழுதகன்னி ஆறாக ஆரம்பத்தில் ஓடிகொண்டிருந்தது. அருவியின் மலைப்பகுதியில் தலையணை என்ற தடுப்பு அணை ஒன்று ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டு அதன்மூலம் ஆயிரப்பேரி ஊராட்சி பகுதி குளங்களான செண்பகாதேவி குளம், செண்பகாதேவி பெட்டைகுளம், சாணான்குளம், சாணான்குளம் பெட்டைகுளம், நெடுங்குளம், நெடுங்குளம் பெட்டைகுளம் என்று ஆறு குளங்கள் மூலம் பாசனங்கள் நடைபெற்று வந்தது. பின்னாளில் இந்த நீரால் பயனடையவிரும்பிய பொதுமக்களும், விவசாயிகளும் தமிழக முதல்வராக இருந்த ஏழை பங்காளர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். அந்த கோரிக்கையாதெனில் அதிக உயரத்தில் இருந்து செங்குத்தாக விழும் இந்த அருவியில் மக்கள் யாரும் நீராட முடியவில்லை என்பதையும், அழுதகன்னி ஆற்றில் மூலம் செல்லும் இந்த தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது என்றும், எனவே இந்த அருவியின் வேகத்தை குறைக்க வழி ஏற்படுத்தி மக்கள் நீராடவும் அழுதகன்னி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை உருவாக்கி அதன்மூலம் விவசாயம் செழிப்படையவும் ஆவனசெய்ய வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கையின் நியாயத்தையும், அவசியத்தையும் ஏற்றுக்கொண்ட அணைகளின் நாயகர் பெருந்தலைவர் பாறைகளில் படிகட்டு போன்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அருவியின் வேகத்தை குறையச் செய்து மக்கள் நீராட ஏதுவாக பழைய குற்றாலத்தை உருவாக்கினார்கள். மேலும் விவசாய தேவைக்கு ஏற்ப செங்குளம், தடுப்பணை, மத்தளம் பாறை, கண்டமங்கலம் தடுப்பணை என பல தடுப்பணைகள் பொதுப்பணித்துறை மூலம் உருவாக்கப்பட்டு 25க்கும் மேற்பட்ட குளங்கள் பயன்பெற வகைசெய்து அதனை 1960-ஆகஸ்ட் நான்காம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள் காமராஜர் அவர்கள் முதல்வராக நேரில் வந்து அருவியையும், தடுப்பணைகளையும் திறந்து வைத்து பெருமை சேர்த்தார்கள் அன்று முதல் பொதுப்பணிதுறை கட்டுபாட்டிலேயும், ஊராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பிலேயும் இந்த அருவி இருந்து வந்தது ஆனால் அருவியையும்

அதனை சுற்றி உள்ள இடங்களையும் சமீபகாலமாக வனத்துறையினர் உரிமை கொண்டாடி பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பல்வேறு இன்னல்களை, இடையூறு களை ஏற்படுத்தி வருகிறது. இது சம்பந்தமாக கடந்த ஓராண்டாக தென்காசி மாவட்ட அனைத்து அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், சமூக நல ஆர்வலர்கள் ஏனைய பொதுநல அமைப்புகள் அனைத்தும் வனத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றோம்.

இந்த நிலையில் தற்பொழுது வனத்துறையின் புதிய உத்தரவுகளான சுற்றுலா பயணிகள் குளிக்க ரூ.20 கட்டணம், பெண்கள் உடைமாற்றும் அறைக்கு கட்டணம், குறிப்பிட்ட எல்கைக்கு பின் வனத்துறை ஏற்பாடு செய்யப்படும் வாகனங்களில் தான் செல்ல வேண்டும் என்ற கண்டிப்பு காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டும் குளிக்க அனுமதி விரும்பிய உணவுகளை உண்ண முடியாத நிலை, தாங்கள் விரும்பியவாறு நீராட முடியாமை என பல கட்டுப்பாடுகளை சுற்றுலா பயணிகளுக்கு விதித்து புதிய உத்தரவு ஒன்றை வனத்துறை பிறப்பித்துள்ளதாக செய்திகள் பத்திரிக்கைகளில் வெளிவருகின்றன. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அணை நீரைப் பயன்படுத்தும் விவசாயிகள் என அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாகி உள்ளனர்.

எனவே தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு பழைய குற்றால அருவி முன்பு எப்போதும் போல் பொதுபணி துறை கட்டுப்பாட்டில் இருந்து வர நடவடிக்கை மேற்கொள்வதோடு வனத்துறையின் புதிய ஆணையை திரும்ப பெற அறிவுறுத்திடவும் பொதுமக்கள் சார்பில் பொதுநலம் கருதி இந்த மனுவை தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்தக் கோரிக்கை மனுவின் நகலினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், தமிழ்நாடு உள்துறை செயலாளர், நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *