தென் மாவட்டத்தில் பருவமழை காலம்முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை
1 min read
Monsoon season in the southern district Advice on progress work
13.5.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர்
சீ.ஜெயச்சந்திரன் தலைமையில் வருகின்ற தென்மேற்கு பருவமழை காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் எதிர்வரும் தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு பொதுப்பணித்துறையினர் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் அவர்களது கட்டுப்பாட்டின் கீழே உள்ள குளங்கள் மற்றும் கால்வாய்களை நேரில் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். நீர்நிலைகளில் உடைப்பு மற்றும் விரிசல் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய தேவையான சாக்கு, மணல் போன்ற பொருட்களை முன்கூட்டியே சேகரித்து வைத்தல் வேண்டும். தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை ஒத்துழைப்புடன் உடனடியாக அகற்றிட வேண்டும். தற்போதுள்ள நீர்நிலைகளில் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெள்ள அபாயம் ஏற்படும் ஆறுகளின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் உள்ள மரங்கள் கீழே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டால் அதை உடனடியாக சீர் செய்ய கிரேன் போன்ற வாகனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். மரம் வெட்டும் இயந்திரங்களின் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலையில் உள்ள பாலங்களில் உட்புறம் மற்றும் வெளிபுறங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாறும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் தொற்று நோயால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்க வைக்கப்படும் பள்ளி வளாகங்களுக்குள் கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும். பள்ளி வகுப்பு தரைகளை லைசல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் தொட்டிகளை குறிப்பிட்ட காலங்களில் சுத்தம் செய்திட வேண்டும்.
அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கழிவு நீர் கால்வாய்களில் கழிவுநீர் தேங்காமல் தூர்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் தேக்கங்களை சுத்தம் செய்ய வேண்டும். கழிவுநீர் கால்வாய்கள் இல்லாத தெருக்களின் ஓரங்களில் கால்வாய்கள் வெட்டி தெருக்களில் கழிவுநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைக்காலங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தடையின்றி வழங்கிடவும் புயல் மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை பொது மக்களுக்கு உடன் தெரிவித்தல் வேண்டும். கால்வாய்களை தூர்வார உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வெள்ளதால் பாதிப்பு ஏற்படும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.சத்துணவு மையங்களுக்கு தேவையான பொருட்களை தட்டுப்பாடு இன்றி வைத்திருக்க வேண்டும். குடிநீர் சீராக வழங்க வேண்டும்.நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும் கால்நடைத்துறையினர் கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முன்னேற்பாடுகள் செய்து தேவையான மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ளுதல் வேண்டும். கால்நடை தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும். மின்சார வாரியத்தினர் 24 X 7 கால அமைப்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர கால கட்டுப்பாட்டு சேவை மையங்களை உருவாக்க வேண்டும். மேலும், எதிர் வரும் தென்மேற்கு பருவமழையினை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை திறன்பட செயல்படுத்த வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் சீ. ஜெயச்சந்திரன் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சேதுராமலிங்கம் மாவட்ட வழங்கல் அலுவலர் பால்துரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுலவர் முத்துராமலிங்கம், தனி வட்டாட்சியர் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை) அரவிந்த் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.