June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரளா முதல்-மந்திரியாக வீ.டி. சதீசன் தேர்வு

1 min read

V.T. Satheesan elected as Kerala Chief Minister

14.5.2026
கேரளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்களுக்கும். தலைவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் ஏற்பட்டு வரும் தாமதம் காரணமாக அவர்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் எம்.பி., கடந்த பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி. சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இவர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தொண்டர்கள் தனித்தனியே பேரணி நடத்தினர்.

இதற்கிடையே முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மேலிடக்குழுவைச் சேர்ந்த 2 பேர் கடந்த வாரம் திருவனத்தபுரத்திற்கு வந்து ஆலோசனை நடத்தினர். ஆனால் இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் மேலிடக்குழு ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பியது.

தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வேணுகோபால் எம்.பி. உள்பட 3 பேரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. அவர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பல மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இவர்கள் 3 பேருமே தங்களுக்குத் தான் முதல்-மந் திரி பதவி வேண்டும் என்று முரண்டு பிடித்தனர். இதனால் இந்த பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவையம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கருத்து கேட்க கேரளத்தின் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களை கட்சி மேலிடம் டெல்லிக்கு அழைத்தது. அதன்படி சுதாகரன், முரளிதரன், சுதீ ரன், எம்.எம்.அசன், முல்லப் பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் டெல்லிக்கு விரைந்தனர்.

மேலும் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியிடமும் கருத்து கேட்கப்பட்டது. தற்போது பிரியங்கா காந்தியும் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காணும் முயற்சியில் இறங்கினார்.

நேற்று மாலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்தநிலையில், கேரளம் மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவராக இருந்தவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான வீ.டி. சதீசன் கேரளம் மாநில முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. கேரளாவின் அடுத்த முதல்-மந்திரியாக வி.டி.சதீசனை கட்சி அறிவித்ததை அடுத்து கேரளாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *