June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

நீட் வினாத்தாள் கசிவில் சிக்கிய சிவராஜ்- பரபரப்பு தகவல்கள்

1 min read

Shivraj caught in NEET question paper leak – sensational news

18.5.2026
நீட் தேர்வை நாடு முழுவதும் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதனால், கஷ்டப்பட்டு ஓராண்டாக, பல ஆண்டுகளாக என படித்து, தேர்வெழுதி, முடிவுக்காக காத்திருந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதில், பேராசிரியைகளான மனிஷா மந்தாரே மற்றும் மனிஷா வாக்மரே ஆகிய இருவரும் முக்கிய புள்ளிகளாக செயல்பட்டு உள்ளனர்.

அவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். புனேவை சேர்ந்த வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னியும் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வுக்கு வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் பல ஆண்டுகளாக இவர் இடம் பெற்றுள்ளார். தேசிய தேர்வு முகமை சார்பாக தேர்வு நடைமுறைகளிலும் இவர் ஈடுபட்டு வந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவும் மோசடி செயலுக்கு சாதகம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

வேதியியல் பேராசிரியரான குல்கர்னி, சிறப்பு பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் ரகசிய வகுப்புகள் நடத்தியுள்ளார். இதில் கலந்து கொள்ள மாணவர்கள் பல லட்சம் செலுத்தியுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுபோன்று அடுத்தடுத்து, அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், சிவராஜ் ரகுநாத் மோதிகாவோங்கர் என்பவரை சி.பி.ஐ. இன்று கைது செய்துள்ளது. இவர் மராட்டியத்தின் லத்தூர் மாவட்டத்தில் ஆர்.சி.சி. என்ற பெயரில் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் நிறுவனர் மற்றும் இயக்குநராகவும் இருந்து வருகிறார்.

என்.டி.ஏ.வுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பிற குழுக்களுடன் சேர்ந்து சிவராஜ் மோதிகாவோங்கர் மோசடி வேலைக்கான சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. பல மணிநேரம் நடந்த விசாரணையின் முடிவில், அவர் கைது செய்யப்பட்டார்.
சிவராஜ் மோதி கடந்த ஏப்ரல் 23-ந்தேதி, வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை பெறுவதற்காக மற்றொரு குற்றவாளியுடன் சேர்ந்து மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளார். அவருடைய மொபைல் போனில் இருந்து, நீட் வினாத்தாள்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அதனை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.

தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே ஏப்ரல் 23-ந்தேதி, வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் அவருக்கு கிடைத்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால், அவருடைய மொபைல் போனில் உள்ள தகவல்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
இந்த மோசடியில் ஈடுபட்ட சிவராஜ் பற்றிய பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. விவசாய குடும்பத்தில் பிறந்தவரான சிவராஜின் தொடக்க கால வாழ்க்கை பயணம் ஆச்சரியம் தரும் வகையில் உள்ளது. தனியார் டியூசன் வகுப்புகளுக்கு சென்று அறிவியல் மாணவர்களுக்கு பாடம் கற்று தருபவராக பணியை தொடங்கினார்.
அப்போது, சைக்கிளில் சென்று பாடம் கற்று தந்து வந்துள்ளார். பின்னர் தனியாக பயிற்சி மையம் ஒன்றை தொடங்க திட்டமிட்டார். இதன்படி, வெறும் 10 மாணவர்களுடன் வாடகை அறையில் ஆர்.சி.சி. பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. வேதியியல் பாடம் கற்று தந்த அவர், முதலில் கையால் எழுதிய குறிப்புகளை கொண்டு பாடங்களை எடுத்து வந்துள்ளார்.
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து நுழைவு தேர்வுக்கு தயார்படுத்தியுள்ளார். தொடக்கத்தில் குறைவான கட்டணம் பெற்று வந்துள்ளார்.
அடுத்த 20 ஆண்டுகளில் அவருடைய பயிற்சி மையம் லத்தூரில் பிரபலமடைந்தது. லத்தூர் தவிர, புனே, நாசிக், சோலாப்பூர், கோலாப்பூர் என ஏழுக்கும் மேற்பட்ட நகரங்களில் அது விரிவடைந்தது. அந்த மையங்களில் 40 ஆயிரம் மாணவர்கள் படிப்பதுடன், ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
எம்.எஸ்.சி. படிப்பில் தங்க பதக்கம் பெற்றவரான அவர் தன்னை தொலைநோக்கு கல்வியாளர் என பயிற்சி மைய வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளார். அவருடைய பயிற்சி மையத்தில், குல்கர்னி முன்பு பாடங்களை கற்று தந்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் உள்ள தொடர்பு பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பெரிய நெட்வொர்க்காக செயல்பட்டு இருக்க கூடும் என கூறப்படுகிறது. முக்கிய புள்ளிகள் சிக்குவார்களா? என்பது விசாரணை முடிவில் தெரிய வரும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நீட் மறுதேர்வு ஜூன் 21-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *