June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு; கார்த்திக்கு நீதிமன்ற காவல்

1 min read

Coimbatore girl rape and murder case; Karthi remanded in judicial custody till June 5

23.5.2026
கோவை அருகே சூலூர் அடுத்த ஒரு கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலையில் கடைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதனிடையே, சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் நேற்று இரவு சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சிறுமியை 2 பேர் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து உடலை முட்புதரில் வீசிச்சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி விளக்கம் அளித்துள்ளார். அப்போது கோவை சரக டி.ஐ.ஜி. சாமிநாதன், எஸ்.பி. பவன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். ஐ.ஜி. அளித்த பேட்டியின்போது, கோவையை அடுத்து சூலூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி காணவில்லை என புகார் கிடைத்ததும் எப்..ஐ.ஆர். பதிவு செய்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 250 சி.சி.டி.வி.க்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதில் நாகையை சேர்ந்த கார்த்தி என்பவர் சிறுமியை அழைத்து சென்றது தெரிய வந்தது. சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்து தென்னந்தோப்பில் படுகொலை செய்துள்ளார். சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான அவரை கைது செய்திருக்கிறோம்.

அவருக்கு உறுதுணையாக இருந்த மோகன்ராஜும் கைது செய்யப்பட்டு உள்ளார். 24 மணிநேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கார்த்தி மனைவியை பிரிந்தவர். குற்றவாளி கார்த்தியும், அவருடைய நண்பர் மோகன்ராஜும் கூலித்தொழிலாளிகள் ஆவர்.

இதில், கார்த்திக்கு வயது 33. அவருடைய தந்தை காசிநாதன் ஆவார். மோகன் (வயது 30), தந்தை ராமசாமி ஆவார். கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த கார்த்தியை காவல் துறையினர் பிடிக்க முயற்சித்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியாக மேல்மாடியில் இருந்து குதித்து தப்பிக்கும்போது, அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரேத பரிசோதனையின் முழு அறிக்கை இன்னும் வரவில்லை என்று கூறியுள்ளார். குற்றவாளிகளுக்கு எதிராக போக்சோ சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, அரசின் நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குற்றவாளிகள் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை பிடித்தது போல விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் பேட்டியின்போது கூறினார்.

இதுபற்றி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்தியிடம், சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் விசாரணை நடத்தினார். கார்த்திக்கு ஜூன் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில், 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. வழக்கில் மற்றொரு குற்றவாளியான மோகன் ராஜுக்கு ஏற்கனவே, மே 27-ந்தேதி வரை காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *