நாடு முழுவதும் வெப்பம் அதிகரிப்பு- மோடி அறிவுறுத்தல்
1 min read
Temperatures are rising across the country – Modi’s instructions
29/5/2026
நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், நாட்டு மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. அதனால் ஏற்படும் சவால்களும் அதிகரித்து வருகின்றன. இந்த வெப்பம் அனைவரையும் கடுமையாக பாதிக்கிறது. எனவே, அனைவரும் அதிகளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.வெளியே செல்லும் போது தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும், தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்துச் செல்லவும். மற்றவர்களுக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் வழங்குங்கள். இத்தகைய காலநிலையில், இப்படிப்பட்ட மனிதநேயம் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.தலைச்சுற்றல், வாந்தி உணர்வு, அதிக சோர்வு போன்ற வெப்ப சோர்வு அறிகுறிகளை கவனிக்க வேண்டும். உங்களிடம் அருகில் இருப்பவர்கள் யாரேனும் உடல்நலக்குறைவாக, பலவீனமாக அல்லது தலைவலியுடன் இருந்தால், உடனடியாக அவர்களை குளிர்ச்சியான நிழலான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். தண்ணீர், ஓஆர்எஸ் போன்றவற்றை வழங்கி உதவ வேண்டும்.
குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளியில் வேலை செய்பவர்கள் கடும் வெப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியவர்கள். இந்த எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிப்பது ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லக்கூடும். சில நேரங்களில் அது ஹீட் ஸ்ட்ரோக்காகவும் மாறலாம். இத்தகைய சூழலில் உடனடி கவனிப்பும் பராமரிப்பும் மிகவும் அவசியம். இந்த வெப்ப அலை காலத்தில், முதிய பெற்றோர், தாத்தா-பாட்டி மற்றும் நமக்கு அன்பானவர்களை அடிக்கடி தொடர்புகொண்டு அவர்களின் நலனை விசாரிக்க வேண்டும்.
போதுமான தண்ணீர் குடிக்கவும், மதிய வெப்ப நேரங்களில் வெளியே செல்லாமல் இருக்கவும், முடிந்தவரை ஓய்வு எடுக்கவும் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். இந்த கடும் வெப்பத்தில், நம்மைச் சுற்றியுள்ள பறவைகள் மற்றும் விலங்குகளையும் நினைவில் கொள்ள வேண்டும். வீடு, பால்கனி, மாடி, கடை அல்லது அலுவலகத்தின் வெளியே ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது, தாகத்தால் தவிக்கும் ஒரு பறவைக்கு உயிர்காக்கும் உதவியாக இருக்கும். இந்த கடினமான நாட்களில் கருணை உணர்வே நம்மை வழிநடத்தட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.