ஆலங்குளம் அரிவாள் வெட்டு சம்பவம்: மேலும் ஒருவரை சுட்டு பிடித்தது போலீஸ்
1 min read
Alankulam scythe cutting incident: Police shoot and arrest another person
31.5.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது. அதற்கு முந்தைய நாள் இரவு மணமகன் வீட்டின் அருகில் சிலர் பேனர் வைத்தபோது, அங்கு மதுபோதையில் வந்த வாலிபர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. ஊர் பெரியவர்கள் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.திருமணம் முடிந்த பிறகு வெள்ளி மாலை மணமகன் வீட்டின் அருகே சிலர் கூடியிருந்தனர். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த சுமார் 9 பேர் கொண்ட கும்பல், அரிவாள்களால் அங்கிருந்த பொதுமக்களை சரமாரியாக வெட்டியது.இதில் நெட்டூரைச் சேர்ந்த ரமேஷ் (49), அவரது மகன் அருள் மாறன் (23), சந்தோஷ்குமார் (21), ராயப்பன் (18), ராம்குமார் (20) மற்றும் திருமணத்திற்கு மேளம் அடிக்க வந்த சம்பவர்வடகரையைச் சேர்ந்த மாடசாமி (19) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியிலும், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களின் உறவினர்கள் நள்ளிரவில் ஆலங்குளம்-ரெட்டியார்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குளம் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நம்பர் பிளேட் இல்லாத 3 மோட்டார் சைக்கிள்களில் கும்பல் வந்தது தெரியவந்தது.
இந்த கும்பல் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டம் மானூரை அடுத்த தெற்குப்பட்டி கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்தது. அங்கு அப்துல் ரகுமான் (35), முபாரக் (30) ஆகியோரை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. அவர்களும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இக்கும்பல் அம்பை பகுதியில் இருந்து தனது அட்டகாசத்தை தொடங்கியுள்ளது. பிரம்மதேசம் பகுதியில் மணிகண்டன் (29) என்பவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி, அரிவாளால் வெட்டினர். அங்கிருந்து வாகைகுளம் பகுதியில் உள்ள சிற்பக்கலை தொழிற்கூட உரிமையாளர் செல்வ கணேசனை மிரட்டி பணம் பறிக்கச் சென்றனர். அவர் இல்லாததால் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர். மேலும், ஊழியரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு, செல்லும் வழியில் நடந்து சென்ற மற்றொருவரையும் வெட்டியுள்ளனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 5 தாக்குதல் சம்பவங்களில் 10 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது பெரும் பீதியை ஏற்படுத்தியது. நெல்லை சரக டி.ஐ.ஜி. தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நள்ளிரவில் சுத்தமல்லி அருகே கல்லூர் பகுதியில் வைத்து நெட்டூரைச் சேர்ந்த இசக்கிமுத்து (19) மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மறுநாள் அதிகாலையில் மேலும் 2 பேரை கைது செய்து விசாரித்தனர். அதன் அடிப்படையில் மேலும் 2 பேர் மானூர் அருகே ஒரு கிராமத்தில் குளம் மற்றும் தோட்ட பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு ட்ரோன் கேமராவுடன் சென்று தேடினர். ட்ரோன் தங்களை நெருங்குவதைக் கண்டு அவர்கள் தப்பி ஓட முயன்றபோது, போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தற்போது 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நெட்டூரை சேர்ந்த அய்யப்பன் என்பவரை போலீசார் நேற்று காலை கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாகி புரம் அருகே உள்ள அரசன் குளம் பகுதியில் அய்யப்பன் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன்பேரில் அவரை கைது செய்ய போலீசார் சென்றுள்ளனர். அப்போது போலீசாரை தாக்க அய்யப்பன் முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அய்யப்பன் காயம் அடைந்தார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அய்யப்பன் தாக்கியதில் காயம் அடைந்த தலைமை காவலரும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.