அதிமுக நிர்வாகி தற்கொலை; எடப்பாடி பழனிசாமி ரூ. 55 லட்சம் இழப்பீடு
1 min read
AIADMK executive commits suicide; Edappadi Palaniswami announces Rs. 55 lakh compensation
1.6.2026
அதிமுகவை ஒன்றிணைக்க வலியுறுத்தி, அந்தக் கட்சியின் நிர்வாகி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்தவர் பூக்கடை மகேந்திரன். இவர், அதிமுக வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலராக இருந்தார். அதிமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்சினைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்ட அவர்,
“மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும், நமது இயக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் எனக்கு மன வேதனை தருகிறது. என்னைப் போன்ற பல இளைஞர்களின் மனதிற்கு ரொம்ப வேதனையாக உள்ளது. எனது இறப்பிற்குப் பிறகாவது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் இணைந்து அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும்.
அனைத்து தொண்டர்களும் கழக நிர்வாகிகளும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும், இதுவரை என்னோடு பயணித்த அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
என்னுடைய உடலுக்கு நான் வணங்கும் மனித தெய்வம் எடப்பாடியார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினால் என்னுடைய ஆத்மா சாந்தி அடையும், நன்றி விடைபெறுகிறேன்” என விடியோ வெளியிட்டு திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்நிலையில், மகேந்திரனின் உடல், பிரேத பரிசோதனைக்காக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, அவரது உடலுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
“உங்கள் குடும்பத்தை அதிமுக கட்சி பார்த்துக் கொள்ளும், கவலைப்படாதீர்கள்” என்று மகேந்திரன் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு இபிஎஸ் அளித்த பேட்டியில், “மகேந்திரன் குழந்தையின் பள்ளிப் படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரையிலான கல்விச் செலவு முழுவதையும் அதிமுக ஏற்கும்.
அவரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 30 லட்சம் இழப்பீடும், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதுபோன்று அதிமுக தொண்டர்கள் செய்யக் கூடாது என பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், கழகத்தின் தீவிர விசுவாசியுமான மகேந்திரன் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சோதனைகளை வென்று சாதனைகள் பலவற்றை படைத்த மாபெரும் பேரியக்கம் ஆகும். ஆகவே, கழக உடன்பிறப்புகள் யாரும் இத்தகைய விரும்பத்தகாத, மனம் வேதனை அடையும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புத் தம்பி மகேந்திரனை இழந்து மிகுந்த மனவேதனையில் வாடும் அவரது மனைவி முனீஸ்வரிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மகேந்திரனுடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மகேந்திரனுடைய குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 30 லட்சம் ரூபாயும்; தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 25 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 55 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும்,மகேந்திரனுடைய ஒரு வயது பெண் குழந்தை தேஸ்னா, பள்ளிக் கல்வி தொடங்குவது முதல் உயர் கல்வி முடிக்கும் வரை அனைத்து கல்வி செலவுகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.