அண்ணாமலை பெருந்துறை தொகுதியில் போட்டியிட முடிவு?
1 min read
Decision to contest from Annamalai Perundurai constituency?
1.6.2026
நடிகர் ரஜினி ஆதரவுடன், தமிழக பா.ஜ.க, முன்னாள் தலைவர் அண்ணாமலை, வரும் 15ம் தேதிக்குள் புதிய கட்சி தொடங்க உள்ளார். அக்கட்சி சார்பில், பெருந்துறை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பா.ஜ.க, தலைவராக அண்ணாமலை இருந்த போது, அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் ஊழல்களை பட்டியலிட்டு, தீவிர எதிர்ப்பை காட்டினார்.
‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் சென்று, பா.ஜ.,வின் கட்டமைப்பையும் பலப்படுத்தினார்; தி.மு.க.,வுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவருக்கென தனி ஆதரவாளர்களும் உருவாகினர்.
மாநில தலைவர் பதவியில் இருந்து, அண்ணாமலை விடுவிக்கப்பட்ட பின், பா.ஜ., தரப்பில் அவருக்கு புதிய பதவி எதுவும் வழங்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதனால், அதிருப்தியில் இருந்த அண்ணாமலை, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.க, படுதோல்வி அடைந்துள்ளதால், தனிக்கட்சி தொடங்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஆதரவாளர்களும், சமூக வலைதளங்களில், அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
புதிய கட்சி தொடங்க உள்ள அண்ணாமலை, தனக்கு நடிகர் ரஜினியின் ஆதரவு கிடைக்கும் என்றும் நம்புகிறார். அவர் வெளிநாடு செல்லும் முன், ரஜினியை சந்தித்து பேசியுள்ளார்.
இதை பிரதிபலிக்கும் வகையில், ரஜினி, அண்ணாமலை ஆகியோர் கைகோர்த்திருப்பது போல, சமூக வலைதளங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் படங்களை பகிர்ந்து வருகின்றனர். ‘தலைவனும், தளபதியும் இணையும் போது, இந்தியாவே மாறும். வாழ்க இந்திய ஒற்றுமை’ என்ற வாசகங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளார் என்ற தகவலுக்கு, ஒரு புறம் ஆதரவும், மற்றொருபுறம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ரஜினி ஆதரவுடன், அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரவும் தகவலுக்கு, தமிழக பா.ஜ., தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் அமைப்பாளர் அர்ஜுனமூர்த்தி மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், ‘சுயநல அரசியல் ஆதாய சந்தைக்காக, அந்த சந்தையை கடந்து வாழும் நல்ல உள்ளங்களை பொருளாக்கி பயனடைய எண்ணாதீர். அது பயனாளிகளுக்கும், பயன்படுத்தும் பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை’ என்று கூறியுள்ளார்.
வரும், 4ம் தேதி அண்ணாமலையின் பிறந்த நாள். எனவே, குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். வரும் 7ம் தேதி தன் ஆதரவாளர்களை சந்திப்பதாகக் கூறியுள்ளார். வரும் 15ம் தேதிக்குள் புது கட்சியை தொடங்குவார். மக்கள் சேவை கட்சி உட்பட சில பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து, அண்ணாமலை அறிவிப்பார்.
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில், இன்னும் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அத்தேர்தலில், பெருந்துறை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடவும் வாய்ப்புள்ளது என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.