June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

திரிணமுல் நிர்வாகிகள் மீது தாக்குதல்: கொல்கத்தாவில் மம்தா தர்ணா

1 min read

Attack on Trinamool officials: Mamata dharna in Kolkata

2.6.2026
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., நிர்வாகிகள் அடுத்தடுத்து தாக்குதலுக்குள்ளான நிலையில், இதனை கண்டித்து முன்னாள் முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆட்சி அதிகாரத்தை பா.ஜ., முதன்முறையாக கைப்பற்றியது. அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வரானார்.

தொடர்ச்சியாக, 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆண்ட மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் உயிரிழந்த திரிணமுல் காங்., தொண்டரின் குடும்பத்தினரை சந்திக்க, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சோனார்பூர் என்ற பகுதிக்கு, மம்தா பானர்ஜியின் உறவினரும், திரிணமுல் காங்., பொதுச்செயலரும், அக்கட்சியின் லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி சமீபத்தில் சென்றார். அப்போது, அவரை முற்றுகையிட்ட உள்ளூர் மக்கள், தடுத்து நிறுத்தி தாக்கினர். இதே போல், ஹூக்ளி மாவட்டத்தின் சண்டிதாலா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற திரிணமுல் காங்., லோக்சபா எம்.பி., கல்யாண் பானர்ஜி மீதும், 20 பேர் அடங்கிய கும்பல் தாக்குதல் நடத்தியது.
திரிணமுல் காங்., நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடந்தது, மேற்கு வங்கம் மட்டுமின்றி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு எ ம்பி கல்யாண் பானர்ஜி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியது.
இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.

ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் தடையை மீறி போராடுவேன் எனக்கூறிய மம்தா, முடிந்தால் தன்னை போலீசார் கைது செய்யட்டும் என சவால் விடுத்தார்.

இந்நிலையில் கோல்கட்டாவில் நடந்த தர்ணாவில் மம்தா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பாஜ தலைவர் என்னிடம் பல முறை பேசி உதவி கேட்டு உள்ளார். இதனை நான் வெளியில் சொன்னது இல்லை. பாஜவைத் தவிர அனைத்து கட்சி தலைவர்களுடனும் எனக்கு நல்லுறவு உள்ளது. இருப்பினும், பாஜவினர் கேட்கும்போது எல்லாம் உதவி செய்துள்ளேன். அவர்களின் மோசமான காலங்களிலும் அவர்களுக்கு உதவி செய்தேன். சாகும் வரை நாங்கள் போராடுவோம். அரசியல் காரணங்கள் மற்றும் தொடர்புகளை தாண்டி மக்களுக்கு ஆதரவாக இருந்தேன். என்னிடம் உதவி கேட்டவர்கள் அனைவரும், அபிஷேக் பானர்ஜி தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போது, உதவி செய்யவில்லை. பாஜவை தோற்கடிக்க தொடர்ந்து போராடுவேன். மேடை அமைக்கவும், மைக்ரோபோன் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மம்தாவின் இந்த போராட்டத்தில் டெப்ரிக் ஒ பிரையன், கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *