பாஜவில் இருந்து விலகினார் அண்ணாமலை
1 min read
Annamalai quits BJP
2.6.2026
பாஜவில் இருந்து அண்ணாமலை விலகினார்; அவர் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் நிதின் நபினிடம் ஒப்படைத்தார்.
பாஜவில் தனக்கு பதவி எதுவும் வழங்கப்படாததால், அதிருப்தியில் உள்ள அண்ணாமலை, தனியாக கட்சி தொடங்க உள்ளதாக, தகவல் பரவியது. இந்தசூழ்நிலையில், அவரை பா.ஜ., டில்லி மேலிடம் அழைத்தது. எனவே, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திப்பதற்காக, நேற்று சென்னையிலிருந்து விமானத்தில், டில்லி புறப்பட்டு சென்றார்.
டில்லியில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் அண்ணாமலை தங்கி இருக்கிறார். இந்நிலையில் இன்று (ஜூன் 02) பாஜ தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார். அப்போது பாஜவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் நிதின் நபினிடம் ஒப்படைத்தார்.
இன்று இரவும் பேச்சுவார்த்தை!
இது குறித்து டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக பாஜவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் மூத்த தலைவர் பி.எல். சந்தோஷ் ஆகியோரையும் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். தனது ராஜினாமா தொடர்பான விவகாரங்கள் குறித்து அவர் இச்சந்திப்புகளில் ஆலோசனை நடத்தினார்.
அமித் ஷாவுடனான சந்திப்புடன் இந்த ஆலோசனைகள் நிறைவடைந்தன. அண்ணாமலையின் ராஜினாமா விவகாரம் குறித்து விவாதித்தனர்; இருப்பினும் அண்ணாமலை இதுவரை தனது ராஜினாமா கடிதத்தை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை. இன்று இரவு பாஜ தேசியத் தலைவர் நிதின் நபின், அண்ணாமலை ஆகியோர் இதே விவகாரம் குறித்து மேலும் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் அண்ணாமலை தமிழகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள தொட்டம்பட்டியில் 1984ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி அண்ணாமலை பிறந்தார். 2011ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்று, கர்நாடக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றினார்.
2020ல் பாஜகவில் இணைந்த அவர், 2021ல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 2021 சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியிலும் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியடைந்தார்.
2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். ஆனாலும் தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அவர் இன்று பாஜவில் இருந்து விலகினார்.
தனிக்கட்சி துவங்க அண்ணாமலை முடிவு; பெருந்துறை தொகுதியில் போட்டி? என்ற தலைப்பில் நேற்றைய தினம் (ஜூன் 01) நமது தினமலர் நாளிதழ் மற்றும் வெப்சைட்டில் செய்தி வெளியாகி இருந்தது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் இடம் வழங்கி இருக்கிறார். தற்போது புதிய கட்சி துவங்குவது குறித்து எப்பொழுது அண்ணாமலை அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.