இந்திரா, நேருவின் நீண்டநாள் பிரதமர் சாதனையை முறியடிக்கும் நரேந்திர மோடி!
1 min read
Narendra Modi set to surpass Nehru’s record for the longest tenure as Prime Minister!
9.6.2026
ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்தில் இருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியா விடுபட்டது. அன்று தொடங்கி, முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை ஜவஹர்லால் நேரு பிரதமராக நியமிக்கப்பட்டார். அவ்வாறு பிரதமராக நியமிக்கப்பட்ட போதிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இல்லாமல் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகவே இருந்தார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அவர் வெற்றி பெற்ற பிறகு, நாட்டின் முதல் பிரதமரான நேரு 1952-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவியேற்றார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ச்சியாக 4,398 நாட்கள் பணியாற்றினார். அதாவது, 1964-ம் ஆண்டு மே 27-ம் தேதி தனது மரணம் வரை நேரு பிரதமராகவே நீடித்தார்.
அவருடைய, நீண்ட கால பிரதமர் சாதனையை பிரதமர் நரேந்திரமோடி இன்று (செவ்வாய்கிழமை) சமன் செதார். நாளை (புதன்கிழமை) முறியடிக்கிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார். அன்று முதல் தற்போது வரை அவர் 3-வது முறையாக தொடர்ந்து பிரதமராக நீடித்து வருகிறார். இவ்வாறு அவர் பிரதமராக தொடர்ந்த நேரத்தில், கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதியன்று, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் சாதனையை முறியடித்தார்.
நாட்டின் பிரதமராக இந்திராகாந்தி, 1966-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி முதல் 1977-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி வரை 4,077 நாட்கள் பதவியில் இருந்தார். அந்த சாதனை முறியடிக்கப்பட்ட ஓராண்டிலேயே, இப்போது நேருவின் சாதனையையும் நாளை (ஜூன் 10-ம் தேதி) பிரதமர் மோடி முறியடிக்க இருக்கிறார்.
இன்றுடன் 4,399 நாட்கள் பிரதமராக பதவியில் நீடித்த முதல் பிரதமர் என்ற பெருமையை நரேந்திரமோடி பெறுகிறார். இதன் மூலம் 4,398 நாட்கள் பிரதமராக இருந்த நேருவின் சாதனையை முறியடிக்கப்படுகிறது. அதாவது, 62 ஆண்டு கால நேருவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வரலாற்று சாதனை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும்.