நீட் மறுதேர்வுக்கான பாதுகாப்பு விதிகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம்: அண்ணாமலை பதிவு
1 min read
Security protocols for the NEET re-exam are causing stress to students: Annamalai’s post.
16.6.2026
நீட் மறு தேர்வுக்கான தீவிர சோதனை, நீட்டிக்கப்பட்ட உடல் பரிசோதனை ஆகியவை மாணவர்களிடம் ஏற்கனவே இருக்கும் தேர்வு பயத்தையும் மன அழுத்தத்தையும் மேலும் அதிகரிக்கவே செய்யுமென ’வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்னாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) ஆகிய 2 அடுக்கு பாதுகாப்பு, இந்திய விமானப்படை (IAF) மூலம் வினாத்தாள்களை ஏற்றிச் செல்லுதல், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய 4 அடுக்கு சிசிடிவி கண்காணிப்பு, தேர்வு மையத்திற்குள் நுழையும் முன் பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார சோதனை, பல கட்ட சோதனைகள் மற்றும் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து நேரடியாகக் கண்காணிக்கப்படும் பல அடுக்கு மேற்பார்வை… கேட்பதற்கு ஏதோ அதிமுக்கிய, ரகசிய ராணுவ மென்பொருள் வாங்குவதற்கான ஏற்பாடுகள்போல தோன்றுகிறதா? ஆனால், இது ஜூன் 21 அன்று நடக்கவுள்ள நீட் மறுதேர்வுக்காக மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகும்.
வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்காக அரசு மேற்கொண்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தீவிர கண்காணிப்பையும் ஒவ்வொரு மாணவரும் நிச்சயம் பாராட்டுவார்கள். ஆனால், தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன் நடத்தப்படும் தீவிர சோதனை, நீட்டிக்கப்பட்ட உடல் பரிசோதனை, ஒட்டுமொத்த தேர்வு நேரம் 180 நிமிடங்களிலிருந்து 195 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது ஆகியவை மாணவர்களிடையே ஏற்கனவே இருக்கும் தேர்வு பயத்தையும் மன அழுத்தத்தையும் மேலும் அதிகரிக்கவே செய்யும்.
வினாத்தாள் கசிவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், பல மாதங்களாக இந்தத் தேர்விற்காகத் தயாராகி வரும் இளம் மாணவர்கள், தேர்வை எதிர்கொள்ளும் முன்பே அவர்கள் மீது சுமத்தப்படும் இந்த கூடுதல் சுமையை அரசு மறந்துவிட்டது. இது ஒட்டுமொத்த தேர்வு முறையின் நோக்கத்தையே சிதைப்பதுடன், தேர்வு மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்ற புதிய தேசிய கல்விக் கொள்கையின் (NEP 2020) இலக்கையும் வீழ்த்தி விடுகிறது.
தேர்வுக்காக இவ்வளவு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், ஹால் டிக்கெட்டுகளை (Admit Cards) பதிவிறக்கம் செய்வதில் மாணவர்கள் இன்னும் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தச் சிக்கல்கள் விரைவில் சரிசெய்யப்படும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளது. சவால்களுக்கு அர்த்தமுள்ள தீர்வுகள் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும், இந்த நீட் மறுதேர்வுக்காக தற்போது வகுக்கப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறைகள், இருக்கும் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மேலும் புதிய சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்பதே எனது கவலையாகும்.”
இவ்வாறு அண்ணாமலை அதில் குறிப்பிட்டுள்ளார்.