மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை: ரூ.2.47 லட்சம் கோடி கடன்
1 min read
Electricity Department White Paper: Rs 2.47 lakh crore debt
25.6.2026
மின்சாரத்துறையின் நிதி நிலைமை மற்றும் செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார். அவர், ”கடந்த 25 வருடங்களாக மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது” என்றார்.
வெள்ளை அறிக்கை விவரம் பின்வருமாறு;
- 2001-2006: வருவாய் ரூ.59,084 கோடி, செலவு ரூ.67,439 கோடி, பற்றாக்குறை ரூ.8,355 கோடி.
- 2006-2011: வருவாய் ரூ.92,737 கோடி, செலவு ரூ.1,28,200 கோடி, பற்றாக்குறை ரூ.35,463 கோடி.
- 2011-2016: வருவாய் ரூ.1,92,971 கோடி, செலவு ரூ.2,49,332 கோடி, பற்றாக்குறை ரூ.56,361 கோடி.
- 2016-2021: வருவாய் ரூ.3,20,140 கோடி, செலவு ரூ.3,78,674 கோடி, பற்றாக்குறை ரூ.58,534 கோடி.
- 2021-2026: வருவாய் ரூ.4,97,996 கோடி, செலவு ரூ.5,32,443 கோடி, பற்றாக்குறை ரூ.34,447 கோடி
25 வருடங்களாக..
வெள்ளை அறிக்கை வெளியிட்டு அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: கடந்த 25 வருடங்களாக மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 25 வருடங்களுக்கு முன்பு லாபம் இல்லை என்றால் நஷ்டம் இல்லாமல் இருந்தது. புதிய பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, திட்டங்கள் இல்லை.
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.87,399 கோடி கடன் வாங்கப்பட்டு உள்ளது. கூடுதல் வருவாய் வந்துள்ளது. அதேநேரத்தில் செலவினம் அதிகம் வந்துள்ளது. ஆனால் முன்னேற்ற திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. இது ஏன் என்று கேள்வி கேட்கிறோம். தமிழக மின்சாரத்துறைக்கு 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
1.40 லட்சம் பணியாளர்களில் 74,714 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 65,921 பேர் பற்றாக்குறையாக உள்ளனர். மின்சாரத்துறையில் 15 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த, அரை மணி நேரத்தில் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
ரூ.215 கோடி சேமிப்பு!
மேலும் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: மின் வாரியத்தில் குறுகிய கால கான்ட்ராக்ட் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. அதை நீண்ட கால கான்ட்ராக்டாக மாற்றுவதன் மூலம் விலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாதம் 215 கோடி ரூபாய் சேமிக்கப்படும்.
கடந்த 2001ம் ஆண்டு 1.35 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் இருந்தன. கடந்த திமுக ஆட்சியில் 99,573 டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்பட்டன. தற்போது மொத்தம் 4,47,603 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. 25 ஆண்டுகளாக பழைய டிரான்ஸ்பார்மர்கள் உள்ளதால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 1.50 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்க திட்டமிட்டள்ளோம்.
எந்த ஊழலும்…
தமிழக மின் வாரியத்தில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு இதுவரை இல்லை, விரைவில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு துவங்கப்படும். மின்சாரத் துறையில் முறைகேடு செய்யவே ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பதவி உயர்வு வழங்காமல் பல பணியாளர்களை ஏமாற்றி உள்ளனர். தற்போது பணி நியமனத்தில் எவ்வித ஊழலும் இருக்காது. இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.