June 27, 2026

Seithi Saral

Tamil News Channel

உள்நோக்கத்தோடு வெள்ளை அறிக்கை – செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

1 min read

White paper with an ulterior motive – Senthil Balaji’s allegation

25.6.2026
தவெக அரசு உள்நோக்கத்தோடு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளதாக செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மின் வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை மின்வாரிய தலைமையகத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று காலை வெளியிட்டார். இந்த நிலையில், தவெக அரசு உள்நோக்கத்துடன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக பேசியதாவது;

”நலிவடைந்து கிடந்த மின் துறையை போதிய நிதி ஒதுக்கி காப்பாற்றியவர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சியில் தடையின்றி மின் விநியோகம் செய்யப்பட்டது. சீரான மின் விநியோகத்துக்கு வித்திட்டவர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மின் துறை வருவாய் 1.77 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில், திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறையை 43 ஆயிரம் கோடியாக குறைத்தோம்.

அதிமுக ஆட்சியில் 3 கட்டங்களாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2021ல் திமுக ஆட்சிக்கு வரும் போதே மின்சார வாரியத்தில் ரூ.1.59 லட்சம் கோடி கடன் இருந்தது. அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்காக நாங்கள் வட்டி கட்டினோம். மின் துறையில் அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்காக 5 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடியை வட்டியாக கட்டியுள்ளோம். அதை ஏன் வெள்ளை அறிக்கையில் சொல்லவில்லை?

ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்து வருவதால், மின்சார கொள்முதல் மற்றும் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. வருவாய் அதிகரித்தாலும் கூட, கொள்முதல் செலவினங்கள் அதிகரித்தன. வெளி மாநிலங்களில் மின்சாரம் வாங்கியதால் செலவு ஏற்பட்டது. அதை ஏன் வெள்ளை அறிக்கையில் காட்டவில்லை? கட்டண உயர்வால் மட்டுமல்ல.. சீர்திருத்தங்கள் மூலமாகவே வருவாயை அதிகரித்துள்ளோம்.

தவெக அரசு உள்நோக்கத்தோடு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. மின் வாரியத்தில் மின்சார கொள்முதல் உள்ளிட்ட செலவினங்கள் அதிகரித்துள்ளதை, தங்களுக்கு வசதியாக தவெக அரசு வெள்ளை அறிக்கையில் மறைத்துள்ளது. பல தகவல்களை மறைத்து, அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு வெள்ளை அறிக்கையை தயாரித்துள்ளனர்.

முதல்வர் விஜய் நேற்று பணி ஆணை வழங்கியவர்கள் எல்லோருமே திமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான். ஏதோ இந்த 40 நாளில் அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி, முடிவுகள் அறிவித்து, தேர்வு செய்யப்பட்டது போல ‘வெளிப்படையாக தேர்வு நடந்தது’ என ரீல்ஸ் வெளியிடப்படுகிறது. “ஏதோ இத்தனை ஆண்டுகள் மின்சார வாரியத்தில் யாருக்குமே பணி உயர்வு வழங்கப்படாததுபோல, அமைச்சர் பேசுகிறார். பணி நியமனங்களும், பதவி உயர்வுகளும் தேர்தல் அறிவிப்பால் மேற்கொள்ள முடியவில்லை.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *