June 27, 2026

Seithi Saral

Tamil News Channel

ரூ.7 கோடி சுருட்டல்- அயோத்தி ராமர் கோவில் காணிக்கை பணத்தை திருடிய 8 ஊழியர்கள் கைது

1 min read

Rs 7 crore siphoned off: 8 employees arrested for stealing Ayodhya Ram Temple donation money.

26.6.2027
அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள். அவ்வாறு செல்லும் பக்தர்கள் ஏராளமாக காணிக்கைகளையும் செலுத்தி வருகிறார்கள்.

இந்த கோவிலை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. பக்தர்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவது மட்டுமில்லாமல் பெரிய அளவிலான தொகைகளை நன்கொடையாக அறக்கட்டளை நிர்வாகத்திலும் வழங்கி வருகிறார்கள்.

இவ்வாறு குவியும் நன்கொடைகளில் கோடிக் கணக்கான பணம் மாயமாகி இருப்பதாகவும் அது பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் மற்றும் பல கட்சிகள் குரல் எழுப்பியது.

இதையடுத்து 3 அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை உத்தர பிரதேச அரசு நியமித்தது. இந்த குழுவினர் ராமர் கோவிலில் முகாமிட்டு விசாரித்து வந்தனர். விசாரணை அறிக்கை மற்றும் பரிந்துரைகள் அரசிடம் கொடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கோவில் அறக்கட்டளை சார்பில் ராமஜென்ம பூமி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அனுகல்ப்மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, அவிநாஷ் சுக்லா, ராம்சங்கர் மிஸ்ரா, ராம் சப்கர் யாதவ், டின்னு யாதவ், சுபாஷ் சந்திர ஸ்ரீவத்சவா, கருணேஷ் பாண்டே ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

அறக்கட்டளையின் பொது செயலாளர் சம்பத் ராயின் கார் டிரைவர் ராம் சங்கர் யாதவ் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். உண்டியல் பணத்தை எண்ணும்போது பணத்தை ஆட்டைய போட்டது அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்ததை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

இவர்கள் கையாடல் செய்த பணம் சுமார் ரூ.7 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது தவிர நன்கொடையாக வழங்கிய தங்கம், வெள்ளி போன்றவைகளையும் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.

அயோத்தி கோவிலில் கோவில் ஊழியர்களே இவ்வாறு பெருந்தொகையை திருடி இருப்பது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. விசாரணை முடிவில் மேலும் சிலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

கோவில் கட்டுமான கமிட்டியின் தலைவரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நிர்பேந்திர மிஸ்ரா கூறும்போது, இந்த திருட்டு விவகாரம் பிரதமர் மோடியின் கவனத்துக்கு சென்றதும் அவர் மிகவும் கவலை அடைந்ததாக கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *