இயக்குனர் பாக்யராஜ் காலமானார்-நாளை அரசு மரியாதையுடன் உடல் தகனம்
1 min read
Director Bhagyaraj has passed away
27.6.2026
பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இன்று (ஜூன் 27) காலை காலமானார். அவருக்கு வயது 73.
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் பாக்யராஜ். இவர், 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனித்துவமான கதைக்களம் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய குடும்பத் திரைப்படங்களை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர். கோவாவில் நடந்த நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு தான் சென்னை திரும்பி உள்ளார் பாக்யராஜ்.
இன்று காலையில் வழக்கம் போல் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூற உடனடியாக அருகில் உள்ளவர்கள் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் உள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் 1953ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தவர் பாக்யராஜ். தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , இயக்குநர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்டவர். ஆரம்பத்தில் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
1979ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவருக்கு மனைவி பூர்ணிமா, மகன், மகள் உள்ளனர்.
நலமாக இருந்த பாக்யராஜ் இன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்வதாக ஏற்கனவே கூறியிருந்தார். அவர் மறைந்ததையடுத்து அவரின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் வந்து அதற்கான பணிகளை மேற்கொண்டு கண்களை தானமாக பெற்று சென்றனர்.
இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். பாக்யராஜ் உடல் நாளை (ஜூன் 28) மதியம் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
‘முந்தானை முடிச்சு’ (1983) திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது பெற்றுள்ளார்.
‘புதிய வார்ப்புகள்’ (1979) திரைப்படத்திற்காக சிறந்த வசன எழுத்தாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது வழங்கப்பட்டது.
சீமா (SIIMA) என்ற வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார்.