ஆர்எஸ்எஸ் நிர்வாகி உடலுக்கு இந்து முறைப்படி முஸ்லிம் பெண் இறுதிச்சடங்கு
1 min read
Muslim woman performs last rites for RSS functionary according to Hindu customs.
30.6.2026
கேரளாவில் உயிரிழந்த ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகியான நாராயணன் என்ற 64 வயது முதியவரின் உடலுக்கு முஸ்லிம் பெண் ஒருவர் இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டம் மீஞ்சா பஞ்சாயத்துப் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். கூலித் தொழிலாளியான இவர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் முன்னாள் நிர்வாகியான நாராயணனை குடும்பத்தார் கைவிட்டுவிட்டனர். உடலை பெற்றுக்கொள்ள 2 நாட்களாக யாரும் வராத நிலையில், காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மஞ்சேஸ்வரம் தொகுதி நிர்வாகியுமான முஸ்லிம் பெண்ணான 34 வயது இர்பானா இக்பால் இறுதி சடங்கு செய்துள்ளார்.
பர்தா அணிந்தபடி இர்பானா இக்பால் இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகின. இதனைப்பார்த்த நெட்டிசன்கள் இர்பானா இக்பாலை மனதார பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இர்பானா, நாராயணன் அண்ணனை கடந்த மாதம் தெருவிலிருந்து மீட்டபோது, அவரை நன்றாகப் பார்த்துக் கொள்வேன் என்று உள்ளூர் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன்.
அவர் உயிரிழந்த பிறகும் என்னால் அவரைக் கைவிட முடியவில்லை. ஒரு மகளாக நின்று நாராயணன் அண்ணனின் இறுதிச் சடங்குகளை நான் நிறைவேற்றியுள்ளேன். மதங்களுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டது மனிதநேயம் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.