‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்த ஒரு கோடியே 20 லட்சம் பேர்- ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்
1 min read
12 million people watched the movie ‘Jananayagan’ – Police inform High Court.
2.7.2026
இணையத்தில் கசிய விடப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என கைதானவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனு விசாரணையின்போது, ஐகோர்ட்டில் சென்னை மாநகர போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் நடிப்பில் தயாரான அவரது கடைசிப்படமான ஜனநாயகன், சென்சார் சான்றிதழ் உள்ளிட்ட பல காரணங்களால் வெளிவராமல் உள்ளது. இச்சூழ்நிலையில், படம் இணையத்தில் கசிந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சைபர் கிரைம் போலீசார், பலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக, தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளது. இந்த சூழலில் வழக்கில் கைதானவர்கள் 2 பேர் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று (ஜூலை 02) விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை மாநகர போலீஸ் தரப்பில், ”இணையத்தில் கசிய விடப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஜாமின் வழங்கினால் ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளது” என வாதிடப்பட்டது. இதையடுத்து போலீசாரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.