சட்டப் பணிகள் குழு தலைவராக நீதிபதி பி.வி.நாகரத்னா நியமனம்
1 min read
Justice B.V. Nagarathna appointed as Chairperson of the Legal Services Committee.
2.7.2026
உச்ச நீதிமன்ற சட்டப் பணிகள் குழுவின் புதிய தலைவராக, மூத்த நீதிபதியான பி.வி. நாகரத்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரையின்படி, தேசிய சட்டப் பணிகள் ஆணையம் இதற்கான அதிகாரப்பூர்வ திருத்த அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள, இந்த புதிய நியமனமானது, கடந்த மாதம் 29, முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த மக்களுக்குத் தரமான இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்காக, ‘சட்டப் பணிகள் ஆணை சட்டம் 1987’-ன் கீழ் இந்த உச்ச நீதிமன்றச் சட்டப் பணிகள் குழு மிக முக்கிய அங்கமாகச் செயல்பட்டு வருகிறது. இனி இந்த அமைப்பின் செயல்பாடுகளை உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமை தாங்கி வழிநடத்துவார்.
நீதித்துறையில் மிகவும் மதிக்கப்படும் மூத்த நீதிபதிகளில் ஒருவரான பி.வி. நாகரத்னா எதிர்காலத்தில் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் தகுதியையும், மூப்பு வரிசையையும் பெற்றவர்.