July 3, 2026

Seithi Saral

Tamil News Channel

அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு பிரதமர் மோடி 5 அன்பு கட்டளை

1 min read

Prime Minister Modi’s 5 affectionate commandments for Amarnath Yatra pilgrims.

3.7.2026
அமர்நாத் புனித யாத்திரையின் போது இயற்கையை பாதுகாப்பது உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்களை பின்பற்றுமாறு பக்தர்களை மோடி வலியுறுத்தினார்.
ஜம்மு – காஷ்மீரின் இமயமலை பகுதியில், 12,730 அடியில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை வருகின்றனர். நடப்பாண்டுக்கான யாத்திரையை, ஜம்மு – காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, அங்குள்ள பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார்.

பக்தர்களுக்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த யாத்திரை, வரும் ஆகஸ்ட், 28ல் நிறைவடைகிறது. பக்தர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: அமர்நாத் யாத்திரையை ஒரு மதப் பயணத்தை விட மேலானது. இது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை விவரிக்கிறது.

இந்த புனித யாத்திரை ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களை அன்போடும் உபசரிப்போடும் வரவேற்கும் ஜம்மு காஷ்மீர் மக்களைப் பாராட்டுகிறேன். யாத்திரை சீராக நடைபெறுவதை உறுதி செய்வதில் ஈடுபட்டிருந்த ராணுவம், போலீசார், பேரிடர் மீட்புக் குழுக்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

யாத்திரையின் போது இயற்கையை பாதுகாப்பது உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்களை பின்பற்றுமாறு பக்தர்களை மோடி வலியுறுத்தினார். அதன் விபரம் பின்வருமாறு:

1.இமயமலைப் பகுதி மற்றும் புனித யாத்திரைப் பாதைகளின் தூய்மையைப் பேணி, அவற்றின் இயற்கை அழகைப் பாதுகாக்க வேண்டும்.

  1. அதிகாரிகளால் வெளியிடப்படும் அனைத்து போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டும்.
  2. ஜம்மு காஷ்மீரில் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த, உள்ளூர் தயாரிப்புகளையும் வணிகங்களையும் ஆதரிக்க வேண்டும்.
  3. புனிதப் பயணம் முடித்து வீடு திரும்பியதும், குடும்ப உறுப்பினர்கள் அல்லது அன்புக்குரியவர்களின் பெயரில் ஒரு மரக்கன்றை நடுங்கள்.
  4. யாத்திரையின் போது ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வை ஊக்குவிக்க வேண்டும்.
    இவ்வாறு 5 கட்டளைகளை பக்தர்களுக்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *