பாகிஸ்தானில் பஸ் தலைகுப்புற கவிழ்ந்ததில் 40 பேர் பலி
1 min read
40 killed as bus overturns in Pakistan.
3.7.2026
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் இருந்து, கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் பெஷாவர் நகரை நோக்கி, 36 பயணியருடன் பஸ் ஒன்று சென்றது. தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் வழியாக, அங்குள்ள மலைப்பாதையில் ஆபத்தான வளைவு ஒன்றில் திரும்ப முயன்ற போது, பஸ்சில் திடீரென பிரேக் பழுதடைந்தது.
அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகிய பஸ், பாறைகள் நிறைந்த ஆழமான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. தகவலறிந்த மீட்பு படையினர், உருக்குலைந்த பஸ்சில் இருந்து, பெண்கள், குழந்தைகள் என, 40 பேரின் சடலங்களை மீட்டனர். படுகாயமடைந்த எட்டு பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான பஸ், குவெட்டாவில் இருந்து கிளம்பும் போது, 36 பயணியருடன் மட்டுமே புறப்பட்டது. ஆனால், வழியில் மற்றொரு பஸ் பழுதடைந்து நின்றுள்ளது. அதிலிருந்த நான்கு பயணியரையும் ஏற்றியுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். பாகிஸ்தானில் சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான சாலை விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த விபத்திற்கு பாக்., அதிபர் அசிப் அலி ஜர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.