பஸ்களில் ‘விடியல்’ வார்த்தை நீக்கம்: ‘மகளிர் பயணம்’ என பெயர் மாற்றம்
1 min read
Word ‘Vidiyal’ Removed from Buses: Renamed ‘Magalir Payanam’
9.7.2026
மகளிர் இலவச பயண திட்ட பஸ்களில், ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு, ‘மகளிர் பயணம்’ என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சியில், அப்போதைய முதல்வர் ஸ்டாலின் 2021 மே 7ம் தேதி, ‘நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தினார். அரசு போக்குவரத்து கழகங்களின், சாதாரண கட்டண பஸ்களில், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. நகர்ப்புறங்களில் வெள்ளை ‘போர்டு’ பஸ்களிலும், கிராமப்புறங்களில் நகர பஸ்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு, பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. திருநங்கையர், மாற்றுத்திறனாளிகளுக்கும், இலவச பஸ் பயணம் விரிவுப்படுத்தப்பட்டது. இந்த பஸ்களை எளிதில் அடையாளம் காண வசதியாக, ‘மகளிர் விடியல் பயணம் ‘ என பெயரிட்டு, பஸ்களின் முன், பின்பகுதியில் பலகை அல்லது டிஜிட்டல் அறிவிப்பு பலகை இடம் பெற்றன.
இதற்கிடையே, இந்த திட்டத்தை அனைத்து அரசு பஸ்களிலும் செயல்படுத்த, தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள த.வெ.க அரசு, திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், மகளிர் இலவச பயண திட்ட பஸ்களில், ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு, ‘மகளிர் பயணம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயக்கப்படும், அனைத்து அரசு டவுன் பஸ்களிலும் பெயர் மாற்றம் செய்யும்படி, போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது, போக்குவரத்து துறை நிர்வாகம் எடுத்துள்ள முடிவு.
இதனால், பயணியருக்கான சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது என, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.