July 16, 2026

Seithi Saral

Tamil News Channel

வாங்சுக் உண்ணாவிரதம்: தேவைப்பட்டால் தலையிடுவோம்.. கோர்ட்டில் மத்திய அரசு பதில்

1 min read


Wangchuk’s hunger strike: We will intervene if necessary – Central Government’s response in court.

16.7.2026
நீட் வினாத்தாள் கசிவு குளறுபடி, யுஜிசி குளறுபடி, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி என தொடர் குளறுபடிகளால் கல்வித்துறை திணறி வருகிறது.

இந்த நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கேயின் தலைமையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் லடாக் செயல்பாட்டாளரும், கல்வியாளருமான சோனம் வாங்சுக் நடத்தும் நடத்தும் உண்ணாவிரதம் 19வது நாளை எட்டியுள்ளது.

அவரது உடல் எடை 8.9 கிலோ குறைந்து தற்போது சுமார் 57 கிலோவாக உள்ளது. 59 வயதான அவரின் உடல் ரத்த அழுத்தம் 105/76 mmHg, சர்க்கரை அளவு 80 mg/dL, ஆக்ஸிஜன் அளவு 97% என்ற மோசமான நிலையில் உள்ளது.

உண்ணாவிரதத்தை கைவிட கோரி அவரை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், சர்வதேச ஆளுமைகள் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால் உயிருக்கே ஆபத்தான சூழலிலும் தனது உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் கைவிட மறுத்துள்ளார்.

வரும் ஜூலை 20ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று ஜந்தர் மந்தரில் இருந்து வீடியோ மூலம் பேசிய சோனம் வாங்சுக், நான் நல்ல நிலைமையில் இல்லை, அதேநேரம் மோசமான நிலையிலும் இல்லை. என்னை ஆதரிப்பவர்கள் எனது உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்துவதுக்கு பதிலாக ஜூலை 20 அன்று பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணியில் வந்து கலந்துகொள்ளுமாறு தன் தளர்ந்த குரலில் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுமாறு மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர், வழக்கறிஞர் ராகேஷ் குமார் சைனி என்பவர் டெல்லி உயர்நீதிதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் தேவேந்திர குமார் உபாத்யாய் மற்றும் தேஜஸ் காரியா அமர்வில் நடைபெற்றது.

வாங்சுக் உடைய உடல்நிலையை தினந்தோறும் கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எந்த ஒரு குடிமகன் உயிரும் விலைமதிப்பற்றது என்றும் நீதிபதிகள் மத்திய அரசை வாய்மொழியாக அறிவுறுத்தினர்.

இன்றைய அமர்வில் மத்திய அரசு சார்பில் ஆஜானாரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வாங்சுக் உடல்நிலை ஏற்கனவே அரசு மருத்துவர்களாலும், மருத்துவ வல்லுநர்களாலும் கண்காணிப்பட்டு வருவதாகவும், உதவி தேவைப்படும் சூழ்நிலை எழும்பட்சத்தில் மருத்துவர்கள் ஆலோசனையின்படி மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிடும் என்றும் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

இதன்பின் பேசிய நீதிபதிகள், மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை வரவேற்பதாக கூறி, பொது நல வழக்கை முடித்து வைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *