July 28, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம்: விபத்தில் சிறுமி பலி- வாகனம் ஓட்டிய சிறுவன் கைது

1 min read

Alangulam: Girl dies in accident; 17-year-old boy who drove the vehicle arrested

27.7.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி–திருநெல்வேலி சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சரக்கு வாகனத்தை இயக்கிய 17 வயது இளஞ்சிறாரையும், அவரை வாகனம் ஓட்ட அனுமதித்த நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுமி மீது அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 24.07.2026 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை 17 வயது இளஞ்சிறார் இயக்கியது உறுதி செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அசோக் குமார் உத்தரவின் பேரில், விபத்தில் தொடர்புடைய சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், வாகனத்தை இயக்கிய இளஞ்சிறாரும், அவரை வாகனம் ஓட்ட அனுமதித்த கள்ளம்புளியைச் சேர்ந்த கணேசன் (வயது ண29) என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், இளஞ்சிறார் இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட கணேசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

18 வயது நிறைவடையாத சிறுவர்களை எந்தவிதமான வாகனத்தையும் இயக்க அனுமதிக்கக் கூடாது என்றும், அவ்வாறு அனுமதிக்கும் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *