மேகதாது விவகாரம்:முதல் அமைச்சர் விஜய்க்கு கர்நாடக பாஜக தலைவர் கடிதம்
1 min read
Mekedatu Issue: Karnataka BJP President writes to Chief Minister Vijay
2.8.2026
கர்நாடக எதிர்க்கட்சி தலைவரும் அம்மாநில பாஜக தலைவருமான விஜயேந்திரா , தமிழக முதல் அமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கோயில்களின் பூமியாகவும், வளமான பண்பாட்டு நாகரிகத்தின் தாயகமாகவும் திகழும் தமிழ்நாடு, கர்நாடகத்துடன் பல நூற்றாண்டுகளாக ஆழமான மற்றும் நிலையான உறவைப் பகிர்ந்து வருகிறது. வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் அதைவிட முக்கியமாக நமது மக்களின் அன்பு ஆகியவற்றால் இணைக்கப்பட்ட அண்டை மாநிலங்கள் நாம். கர்நாடகமும் தமிழ்நாடும் பரஸ்பர மரியாதை மற்றும் நல்லெண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு சகோதர மாநிலங்களாக வாழ்ந்து வருகின்றன. கோடிக்கணக்கான தமிழர்கள், குறிப்பாக பெங்களூருவை தங்களது இல்லமாகக் கொண்டு, கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். அதேபோல், தமிழ்நாட்டில் வாழ்ந்து பணியாற்றும் கன்னடர்களும் உங்கள் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் வளத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். மாநில எல்லைகளைக் கடந்த மக்களிடையேயான ஆழமான உறவிற்கு இது சான்றாகும்.
அண்டை மாநிலங்களாக இருப்பதால் கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் அவற்றை எவ்வாறு தீர்க்கிறோம் என்பதே முக்கியம். பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைச் சுற்றிய நீண்டகால பிரச்சினை, முன்னாள் கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா மற்றும் முன்னாள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரின் முதிர்ச்சியான அணுகுமுறையால் இறுதியில் தீர்க்கப்பட்டது என்பது நினைவுக்கு வருகிறது. மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும்போது, கடினமான பிரச்சினைகளுக்குக் கூட தீர்வு காண முடியும் என்பதை அவர்களின் செயல்பாடு நிரூபித்தது. அதே ஒத்துழைப்பு மனப்பான்மையுடன்தான் இன்று நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரைச் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக நீங்கள் விரைவில் நம்ம பெங்களூருவுக்கு வர உள்ளீர்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். இந்தப் பேச்சுவார்த்தையை அரசியல் முதிர்ச்சியுடனும், அதைவிட முக்கியமாக கர்நாடக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நிலையைப் புரிந்துகொள்ளும் மனப்பான்மையுடனும் அணுகுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
“காவிரி, பெங்களூரு மற்றும் காவிரி படுகைப் பகுதிகளில் உள்ள பல நகரங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதார நதியாகும். கர்நாடகாவில் வாழும் கன்னடர்களும், தமிழர்களும் தங்களின் குடிநீர் தேவைக்காக காவிரியையே சார்ந்துள்ளனர். போதிய அளவில் இல்லாத மற்றும் ஒழுங்கற்ற பருவமழையால் விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில், அவர்களின் கவலைகளை புறக்கணிக்க முடியாது.மேகேதாட்டு திட்டத்தை ஒத்துழைப்பு மனப்பான்மையுடன் அணுகுமாறும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திட்டம், தமிழ்நாட்டின் சட்டப்பூர்வமான நீர் தேவைகளை பாதிக்காமல், பெங்களூரின் குடிநீர் தேவையை குறிப்பிடத்தக்க அளவில் பூர்த்தி செய்ய உதவும். இந்தத் திட்டத்திற்கு நீங்கள் அளிக்கும் ஆதரவு, நமது இரு மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பின் வலுவான அடையாளமாக அமையும். கர்நாடகாவின் நியாயமான நலன்களைப் பாதுகாப்பதோடு, தமிழ்நாட்டின் உரிமைகளையும் மதிக்கும் அரசியல்வாதிக்குரிய நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பீர்கள் என்றும், நமது இரு மாநிலங்களுக்கிடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை மேலும் வலுப்படுத்த உதவுவீர்கள் என்றும் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.