சங்கரன்கோவில் கொலையில் 3 சிறுவர்கள் கைது
1 min read
Three juveniles arrested in Sankarankovil murder case.
25/8/2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள திருவிக தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமணன் என்பவரது மகன் மாரியப்பன் (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி. மாரியப்பனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஆவணி மாதம் கடைசியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் மாரியப்பன் நேற்று மதியம் திரு.வி.க தெருவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான வயல் காட்டில் வெட்டி கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடைப்பதாக சங்கரன்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சங்கரன்கோவில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், கிங்ஸ்லி தேவானந்த், சுஜித் ஆனந்த், பாரதிராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இருந்த மாரியப்பனின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் அங்குள்ள சிசிடிவி காணொளி காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வெட்டிக் கொல்லப்பட்ட மாரியப்பன் உடன் மூன்று சிறுவர்கள் உடன் சென்றது தெரிய வந்தது. அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் தின்பண்டம் வாங்கி வர தாமதம் ஆனதால் வெட்டிக் கொல்லப்பட்ட மாரியப்பன், சிறுவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூவரும் மாரியப்பனை நுங்கு வெட்டும் அரிவாளால் வெட்டியதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..