September 1, 2026

Seithi Saral

Tamil News Channel

விவசாயி வீட்டிற்கு சென்ற விஜய், பாட்டிக்கு கூலிங்கிளாஸ் பரிசளித்தார்

1 min read

Vijay visited a farmer’s house and gifted a pair of sunglasses to the grandmother.

1.9.2026
மேட்டூர் அணையைத் திறந்து வைத்த முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து சேலம் நோக்கி திரும்பியபோது சின்னக்காவூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கும் அவர் நேரில் சென்று குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

முதல்-அமைச்சர் விஜய்யை வரவேற்க சின்னக்காவூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களை சந்தித்து பேசிய விஜய், பின்னர் அங்கிருந்த விவசாயி ஒருவரின் வீட்டிற்குச் சென்றார். அவரது வருகையால் அந்தப் பகுதியே உற்சாகமடைந்தது.

விவசாய குடும்பத்தினரை சந்தித்த விஜய், அவர்கள் மேற்கொண்டு வரும் விவசாயம், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். அதற்கு, வீட்டின் பின்புறம் வாழை மரங்களை வளர்த்து வருவதாகவும், அதுவே தங்களது முக்கிய வாழ்வாதாரம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், தங்களது குடும்பத்திற்கு என்னென்ன உதவிகள் தேவை என்பது குறித்தும் விஜய் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதையடுத்து, விஜய்யை வழியனுப்ப விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பாட்டியும் அவருடன் கைகோர்த்தபடி வந்தார். அப்போது அவருக்கு பிரியாவிடை கொடுத்த விஜய், தான் அணிந்திருந்த கூலிங்கிளாஸ்-ஐ அந்தப் பாட்டிக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

விஜய்யுடன் கைகோர்த்தபடி வந்த பாட்டியைப் பார்த்து அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் கையசைத்தனர். அப்போது விஜய்யும் மக்களை நோக்கி கையசைத்ததுடன், பாட்டியையும் மக்களை நோக்கி கையசைக்குமாறு கூறினார். இதையடுத்து பாட்டியும் விஜய்யுடன் சேர்ந்து மக்களை நோக்கி கையசைத்தார்.

விஜய் அணிந்திருந்த கூலிங்கிளாஸ்-ஐ அணிந்துகொண்ட பாட்டிக்கு மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த உணர்வு ஏற்பட்டது. அந்தக் கண்ணாடியை அணிந்திருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையில், விஜய் அணிந்திருந்த கண்ணாடியை பாட்டி அணிந்திருந்ததைப் பார்த்த அப்பகுதி இளைஞர்களும் ஆர்வம் காட்டினர். பின்னர் அவர்கள் பாட்டியிடம் நெருங்கி வந்து அந்தக் கண்ணாடியை அணிந்து பார்த்ததுடன், அதனை அணிந்தபடி புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். விஜய்–பாட்டி இடையேயான இந்த அன்பான சந்திப்பு, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *