ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கைது
1 min read
Environmental engineer arrested for demanding Rs 10 lakh bribe.
4.9.2026
கல்குவாரி நிறுவனம் அமைப்பதற்கு அனுமதி பெறுவதற்காக வந்த நபரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் பகுதியில் புதியதாக கல்குவாரி நிறுவனம் ஒன்றை அமைப்பதற்காக பணிகளை மேற்கொண்டு வந்தார். அதற்கு முதற்கட்டமாக நிறுவனத்திற்கு அனுமதி சான்றிதழ் பெற சுற்றுச்சூழல் பொறியாளர் புருசோத்தமனிடம் (வயது 48) மனு அளித்திருந்தார். அவருக்கு அனுமதி சான்றிதழ் வழங்குவதற்காக சுற்றுச்சூழல் துறை பொறியாளர் புருசோத்தமன் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரதாப் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ரசாயனம் தடவிய ரூ.3 லட்சத்தை பிரதாபிடம் கொடுத்து சுற்றுச்சூழல் பொறியாளரிடம் வழங்குமாறு கூறினர். அதன்படி, அவர் ரசாயனம் தடவிய பணத்தை புருசோத்தமனிடம் வழங்கினார். அப்போது பணத்தை பெற்றதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், இந்த குற்றத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்ட சிவக்குமார் மற்றும் முருகன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இடைத்தரகர்கள் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்து, அங்கிருந்த ரூ.25 லட்சம் ரொக்க பணமும், 6 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.