பகத் சிங்கின் 119-வது பிறந்தநாள்-பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி
1 min read
Bhagat Singh’s 119th Birth Anniversary – Prime Minister Narendra Modi Pays Tribute
28.9.2026
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனது இளம் வயதிலேயே உயிரைத் தியாகம் செய்த புரட்சியாளர் பகத்சிங்கின் 119-வது பிறந்தநாள் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
கடந்த 1907-ஆம் ஆண்டு இதே நாளில், பஞ்சாபின் லியால்பூர் மாவட்டத்தில் உள்ள பங்கா கிராமத்தில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பகத் சிங் பிறந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தில் பிறந்த இவர், ஏழு உடன்பிறப்புகளில் இரண்டாவதாகப் பிறந்தவர் ஆவார்.
சிறுவயதில் இவர் அன்போடு ‘பாகன்வாலா’ (Bhaganwala – அதிர்ஷ்டசாலி) என்று அழைக்கப்பட்டார். நாட்டின் விடுதலைக்காகத் தனது தோழர்களான ராஜ்குரு மற்றும் சுக்தேவுடன் இணைந்து தூக்குக் கயிற்றை முத்தமிட்டு, தனது பெயருக்கு ஏற்ப பாரத மண்ணிற்குப் பெருமை சேர்த்தார்.
பகத்சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ‘ஜஷ்ன்-இ-இன்குலாப்’ என்ற பெயரில் மாநில அளவிலான பிரம்மாண்ட கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
மேலும், ஷஹீத் பகத் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான ‘கட்கர் கலான்’ பகுதிக்குத் தங்களின் வீரவணக்கத்தைச் ஏராளமான பொதுமக்கள் செலுத்தினர்.
பகத் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மாவீரனுக்குத் தனது அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.
அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,”பகத் சிங்கின் அடக்க முடியாத துணிச்சலும் வீரமும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு புதிய ஆற்றலைப் பாய்ச்சியது. தேசத்தின் பெருமைக்காகத் தனது அனைத்தையும் தியாகம் செய்த அவரது உணர்வு, இந்தியாவின் இன்றைய இளைய தலைமுறையின் தைரியத்திற்கும் உறுதிப்பாட்டிற்கும் என்றும் அழியாத அடையாளமாகும்.”
மேலும், பிரதமர் மோடி பகத் சிங்கின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சிறப்பு வீடியோவையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.