கடையநல்லூரில் காதலிப்பதாக கூறி பெண்ணிடம்நகை, பணம் பறித்த வாலிபர் கைது.
1 min read
Young man arrested in Kadayanallur for swindling a woman of jewelry and money under the pretext of being in love.
28.9.2026
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்தாளராக வேலை செய்து வருகிறார்.
அந்த இளம்பெண்ணின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இவரது தாய் தென்காசி அரசு மருத்துவமனையில் சலவையாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு கோவில் திருவிழாவிற்கு சென்றபோது, புளியங்குடி நடுத்தெருவை சேர்ந்த ரவி என்பவரது மகன் பிரவீன்குமார்(வயது 24) என்பவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே திருமணம் செய்து கொள்வதாக பிரவீன்குமார் ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் நெருங்கி இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 4-ந்தேதி பிரவீன்குமார் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அதனை நம்பிய இளம்பெண், தனது வீட்டிற்கு வரவழைத்து அவரிடம் இருந்த 4 கிராம் தங்க கம்மலையும், ஜி.பே. மூலம் ரூ. 70 ஆயிரம் பணத்தையும் கொடுத்துள்ளார்.
அதன்பிறகும் பிரவீன்குமார் தொடர்ந்து பணம் கேட்டு டார்ச்சர் செய்ததால், கடந்த 15 நாட்களாக இளம்பெண் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டு தனது தங்க கம்மலை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால், பிரவீன்குமார் கம்மலை தர மறுத்ததோடு, தொடர்ந்து போன் செய்து தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் இளம்பெண் போனை எடுக்காததால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பஸ் நிலையத்தில் தாயுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுளார். இதுகுறித்து இளம்பெண் கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.