October 7, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் திருப்பணி தீவிரம்

1 min read

Consecration ceremony at Kutralanathaswami Temple soon.

7.10.2026
தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோவிலில் கடந்த 27.08.2010ம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். தற்போது 16 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி பாலாலயம் நடந்தது.

இதில் முதல் கட்டமாக
இக் கோவிலில் உள்ள திருக்குற்றாலநாதர் சுவாமி சன்னதியின் கோபுரம் மற்றும் குழல்வாய்மொழி அம்மன் சன்னதியின் கோபுரம் கோவில் நுழைவாயில் மண்டபத்தின் ராஜகோபுரம் ஆகிய மூன்று கோபுரங்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்வதற்கான பாலாலயம் நடத்தப்பட்டு தற்போது கோவிலின் மேற்கூரையில் தள ஓடுகள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் மேற்கூரை மொத்தம் 60 ஆயிரம் சதுர அடி உள்ளது. இதில் 40 ஆயிரம் சதுர அடிக்கு தள ஓடுகள் பதிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இந்நிலையில் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன் தலைமையில் உறுப்பினர்கள் ஸ்ரீதர், வீரபாண்டியன், சுந்தர்ராஜன், ராமலட்சுமி மற்றும் அலுவலக பணியாளர்கள் பார்வையிட்டனர். பின்னர் இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் பொறுப்பேற்று ஒரு வருடம் முடிந்துவிட்டது. கடந்த 2025 மார்ச் மாதம் நாங்கள் பொறுப்பேற்றோம்.
இங்கே குற்றாலநாதர் கோயில் கூடவே, முக்கூடல் அருகில் உள்ள வன்னியப்பர் கோயில் மற்றும் நரசிங்கநாதர் கோயில் என இரண்டு கோயில்களிலும் திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. அந்த வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன.
குற்றாலநாதர் கோவிலில் தற்போது 2 கோடியே 73 லட்சம் ரூபாய்க்கு அனுமதி அளித்து திருப்பணிகள் நடந்து வருகிறது. எங்களுக்கு ஒரே ஒரு குறைபாடு என்னவென்றால், நாங்கள் பொறுப்பேற்ற மறுநாளே சித்திரசபையிலும் பாலாலயம் நடத்தப்பட்டது. அது இன்று வரை மூடியே கிடக்கிறது. இதனால் வரும் பக்தர்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.
இதற்கும் அறங்காவலர் குழுவுக்கும் சம்பந்தம் இல்லை.
நீதிமன்றத்தில் உள்ள அந்த வழக்கை வேகமாக முடிக்கப் பாருங்கள் என்று. சித்திரசபை வேலை நடக்காமல், பக்தர்களையும் உள்ளே அனுமதிக்காமல் ஒன்றரை ஆண்டுகளாக மூடிக் கிடப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
எனவே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையருக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அந்த நீதிமன்ற வழக்கை விரைவில் முடித்து, சித்திரசபை திருப்பணி வேலைகளை சிறப்பாக தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு எந்த பிரச்சனையும் இல்லை.

குற்றாலநாதசாமி திருக்கோவில் திருப்பணிகள் சுமார் 70 சதவீதம் முடிந்துவிட்டது. மேலும் இக்கோயிலில் ஏராளமான இடவசதி மற்றும் சொத்துக்களும் உள்ளது. குற்றாலநாதசுவாமி கோவிலை சுற்றி கோட்டைச்சுவரும், 13 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டுவதற்கும் மற்றும் சித்திர சபையை சுற்றி கோட்டை சுவர் கட்டுவதற்கும் ஆவண செய்யும்படி தமிழ் நாடு அரசுக்கு அறங்காவலர் குழு பணிவான வேண்டுகோள் வைக்கிறோம்.
இவ்வாறு அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *