தமிழகத்தில் ரூ. 3,700 கோடி தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்-மோடி அடிக்கல் நாட்டினார்
1 min read
Modi lays foundation stone for National Highway projects worth Rs 3,700 crore in Tamil Nadu.
11.10.2026
தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வந்தார். அவர் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 10.58 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.
விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் விஜய்யும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாட்டில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
குறிப்பாக, 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 750 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட 5 ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார்.
முன்னதாக, சுமார் ரூ.4,900 கோடி செலவில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் விஜய்யும் இணைந்து புதிய மெட்ரோ வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், மெட்ரோ ரெயிலிலும் பயணம் செய்தனர்.
இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். முன்னதாக சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் விஜய், கவர்னர் அர்லேகர் ஆகியோர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
இதையடுத்து, சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, தனது ஒரு நாள் பயணத்தை நிறைவு செய்து டெல்லி புறப்பட்டார். தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் விஜய் வழியனுப்பி வைத்தார்.
13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
நமது மாநிலங்களை வலிமையானதாக மாற்றி, இந்தியாவை வலிமையானதாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஊக்கப்படுத்துகிறது. தமிழகத்தின் உற்பத்திதுறை, சிறுதொழில் நிறுவனங்களின் ஊழியர்கள் மீது தேசம் பெருமிதம் கொள்கிறது.மேக் இன் இந்தியா, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு என்ற மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு பயன் அளிக்கும்.
உலகில் மொபைல்போன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 2014 முதல் இதுவரை மின்னணு உற்பத்தி ஏற்றுமதி 16 மடங்கும், பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 50 மடங்கு அதிகரித்தது. பொறியியல் ஏற்றுமதியும் சாதனை படைத்துள்ளது. இதனால் நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்தது. இதில் தமிழகத்திற்கு பங்களிப்பு இருக்கிறது.
சென்னை மீன்பிடி துறைமுகம் நவீனமயமாக்கம், தமிழகத்தில் கடற்பாசி மேம்பாடு ஆகியவற்றில் மத்திய அரசு உதவுகிறது. விவசாயிகள் கடன் அட்டை, மீனவர்களுக்கும் எளிதாக கிடைக்கிறது. தேசத்தின் மீன்பிடி தொழில் வளர்கிறது. கடந்த ஆண்டில் கடல்சார் ஏற்றுமதி அளவு அதிகரித்தது. இதனால் மீனவர்கள் வாழ்க்கை மேலும் மேம்பட்டது.
இன்று துவங்கப்பட்ட திட்டங்கள் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் கனவுக்கான பாதையை உருவாக்குகிறது. சாதனை படைக்கும் தமிழகத்தை உருவாக்க விரும்புகிறோம். இதற்காக மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உங்களுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். தமிழக மக்களின் உழைப்பும், ஆற்றலும் தேசத்தின் எதிர்காலத்திற்கு திசை அளிப்பதில் பங்காற்ற வேண்டும். வளர்ச்சியடைந்த தமிழகத்தில் இருந்து வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.