சென்னையில் மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் – கைது
1 min read
Medical workers’ protest in Chennai – Arrests made
12.10.2026
தமிழகத்தில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் தற்காலிக பணி நியமன அடிப்படையில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இணை இயக்குனர்கள் மூலம் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
ஐந்தாண்டு காலம் பணி முடிந்தவுடன் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என பணி நியமன ஆணையில் சொல்லப்பட்டிருந்த நிலையில், பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மருத்துவப் பணியாளர்கள் தற்போது வரை தினக்கூலி அடிப்படையிலேயே பணிபுரிந்து வரும் நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கையை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் பணி நிரந்தரம், மாதம் ஒரு நாள் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை எழும்பூரில் உள்ள சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மருத்துவ பணியாளர்கள் அறிவித்திருந்தனர். இதனையடுத்து இந்த போராட்டத்தை தடுக்கும் விதமாக நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களின் வீடுகளுக்கே சென்ற போலீசார் அவர்களை வீட்டு காவலில் வைத்தனர்.
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் தடுத்து நிறுத்தி வீட்டு காவல் வைக்கப்பட்டனர். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் அனுமதியின்றி சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்து அரசு வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.