October 19, 2026

Seithi Saral

Tamil News Channel

சீனாவில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை தொடக்கம்

1 min read

Direct cargo shipping service from China to Tuticorin has commenced.

19.10.2026
சீனாவில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடியாக சரக்கு கப்பல் சேவை தொடங்கி உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவை இணைக்கும் வகையில் ரீஜினல் கண்டெய்னர் லைன் நிறுவனத்தின் மூலம் நேரடியாக சீனா, வியட்நாம் வழியாக தூத்துக்குடிக்கு சரக்கு கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நேற்று முதல் முறையாக எம்.வி.நவதா பூம் என்ற சரக்கு பெட்டக கப்பல் தூத்துக்குடிக்கு வந்தது. அந்த கப்பலை வ.உ.சி. துறைமுக அதிகாரிகள், சரக்கு பெட்டக முனைய அதிகாரிகள் வரவேற்றனர். 147.82 மீட்டர் நீளமும், 23.38 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல். 1100 சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டது.

இந்த கப்பல் சீனாவின் கின்ஷோ துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, வியட்நாமின் ஹைபோங் துறைமுகம் வழியாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வந்தடைந்தது. பின்னர் காட்டுப்பள்ளி துறைமுகம், வியட்நாமின் சூலாய் துறைமுகத்தை சென்றடைகிறது.

அங்கிருந்து கின்ஷோவுக்கு திரும்புகிறது. சீனாவின் கின்ஷோவில் இருந்து தூத்துக்குடியை வந்தடைய 13 நாட்களும், வியட்நாமின் ஹைபோங்கில் இருந்து தூத்துக்குடியை வந்தடைய 12 நாட்களும் ஆகிறது.

இந்த கப்பல் தற்போது வாரத்துக்கு இருமுறை மட்டும் இயக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் தேவையை பொறுத்து சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கப்பல் சேவை மூலம் தென்சீனா மற்றும் வியட்நாமுடனான துறைமுகத்தின் கடல்வழி இணைப்பு மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரிய மின்தகடு உற்பத்தி, மின்சார வாகன உற்பத்தி உள்ளிட்ட தொழில் துறைகளுக்கு கூடுதல் வர்த்தக வாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *