டெல்லியில் தொடர் போராட்டத்தால் வியாபாரிகளுக்கு ரூ.3,000 கோடி இழப்பு
1 min read
Traders in Delhi suffer a loss of Rs 3,000 crore due to ongoing protests
19.10.2026
டெல்லியில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால், தீபாவளிக்குள் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான வர்த்தக இழப்பு ஏற்படக்கூடும் என்று வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.டெல்லியில் அக்டோபர் மாதத்தில் இதுவரை நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளால் சுமார் ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது: அக்டோபர் 10-ம் தேதி நடைபெற்ற போராட்டங்களால் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. அக்டோபர் 13 முதல் 16-ம் தேதி வரை மேலும் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டது’ என்று கூறினார். சாலைத் தடுப்புகள், மெட்ரோ ரெயில் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் வர்த்தகப் பகுதிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
மொத்த இழப்பில் சில்லறை வர்த்தகத்தில் ரூ.1,800 கோடியும், மொத்த விற்பனை வர்த்தகத்தில் ரூ.600 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகதெரிவித்துள்ளது. தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று, போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் நீடித்தால், நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிக்குள் வர்த்தக இழப்பு ரூ.10,000 கோடியைத் தாண்டக்கூடும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள காங்கிரஸ் பேரணியை ரத்து செய்ய வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று டெல்லி வியாபார் மகாசங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர், காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.அக்டோபர் 29 முதல் நவம்பர் 3-ம் தேதி வரை இந்தியா கூட்டணியின் நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, நவம்பர் 1-ம் தேதி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்த காங்கிரஸ் கட்சிக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
ராம்லீலா மைதானத்துக்கு அருகில் சதர் பஜார், சாந்தினி சவுக், காரி பவுலி, சாவ்ரி பஜார் உள்ளிட்ட முக்கிய மொத்த விற்பனைச் சந்தைகள் அமைந்துள்ளன.தீபாவளிக்கு முந்தைய வாரங்களில் இந்தச் சந்தைகளில் விற்பனை மற்றும் பொருட்களை அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெறும். இந்த நேரத்தில் பெரிய அளவில் கூட்டம் கூடினால், சரக்குப் போக்குவரத்து தாமதமடைவதுடன், ஆர்டர்கள் ரத்து செய்யப்படுவதற்கும் வாடிக்கையாளர்கள் வேறு இடங்களுக்குச் செல்வதற்கும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.ஏற்கெனவே நடைபெற்ற போராட்டங்களால் மொத்த வர்த்தகத்தில் சுமார் 30 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி வியாபாரிகள் அமைப்பு கூறியுள்ளது.