தென்காசி மாவட்ட தாவெக.வில் உள்கட்சி பூசல்
1 min read
Internal party strife within the Tenkasi District unit of the TAVEKA
2/11/2026
தென்காசி தவெக மாவட்டச் செயலாளர் ராஜபிரகாஷ் மீது அவதூறு பரப்புவோர் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்: அவதூறுகளை பரப்புவதால் தங்களால் மக்களிடம் செல்ல முடியவில்லை என ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் கொந்தளிப்பு!
தென்காசி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் தொடக்கம் முதலே தீவிரமாக இயங்கி வரும் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜ பிரகாஷ், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியின் வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும், தொடர்ந்து மாவட்டச் செயலாளராகக் கட்சிப் பணிகளை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில், அண்மைக்காலமாக தென்காசி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட சிலர் மீது மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுத்து அவர்களை கட்சியிலிருந்து நீக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கு கட்சிக்குள் இரு அணிகள் உருவாகி செயல்படத் தொடங்கியுள்ளன. இதனால் மற்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாத அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாவூர்சத்திரத்தில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் ராஜ பிரகாஷ் மீது சமூக வலைதளங்கள் வாயிலாகத் திட்டமிட்டு சிலர் அவதூறுகளைப் பரப்பி வருவதாகவும், இது தொடர்பாக காவல்துறையில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டும் இத்தகைய விஷமப் பிரச்சாரங்கள் தொடர்ந்து நீடிப்பதாகவும் நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். உட்கட்சிப் பூசல் மற்றும் திட்டமிட்ட அவதூறுகளால் மக்களிடம் சென்று பணிகளை மேற்கொள்வதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரே தலைமையில் முழு சுதந்திரத்தோடு செயல்படக்கூடிய சுமுகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது தலைமை உடனடியாகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் குழப்பங்கள் நீங்கி மக்களுடன் களப்பணியாற்ற முடியும் எனவும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். உட்கட்சிப் பூசலும் அவதூறுப் பரவல்களும் தவெக-வின் உண்மைத் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
One attachment • Scanned by Gmail