November 5, 2026

Seithi Saral

Tamil News Channel

வறட்சியால் முடங்கும் பத்தமடை பாய் தொழில்

1 min read

Pathamadai mat-weaving industry crippled by drought

5.11.2026
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பத்தமடையில் தயாரிக்கப்படும் கோரைப்பாய்கள் உலக அளவில் புகழ்பெற்றவை. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த பாய் நெசவுத் தொழில், பாரம்பரிய கைத்தறி தொழில்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த பத்தமடை பாய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1953-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்து இளவரசி எலிசபெத் ராணிக்கு பத்தமடை பாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசு பரிமாற்றத்திற்கு பிறகு பத்தமடை பாய் சர்வதேச அளவில் மேலும் பிரபலமானது.

நெல்லையில் இருந்து சுமார் 29 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பத்தமடையில் ஆரம்ப காலத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாய் நெசவுத் தொழிலை முக்கிய வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர். ஆண்களைவிட பெண்களே இந்த தொழிலில் அதிக அளவில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், காலப்போக்கில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பத்தமடை பாய் நெசவுத் தொழில் படிப்படியாக நலிவடைந்தது. 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வந்த இந்த தொழிலில் தற்போது 50-க்கும் குறைவான குடும்பத்தினரே தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பாரம்பரிய முறையில் கைத்தறியில் பாய் நெய்யும் தொழிலாளர்கள் 10 பேருக்கும் குறைவாகவே உள்ளனர். பெரும்பாலும் விசைத்தறிகள் மூலமாகவே தற்போது பாய்கள் தயாரிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் திருச்சி, கரூர், சீர்காழி, கொள்ளிடம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கோரைப்பாய்கள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், பத்தமடை பாய்களுக்கு தனி மவுசு உள்ளது. மற்ற பகுதிகளில் தோட்டங்களில் கோரைப்புல் பயிரிடப்பட்டு பாய் உற்பத்தி நடைபெறுகிறது.

ஆனால், பத்தமடையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இயற்கையாக வளரும் கோரைப்புல்லை பயன்படுத்தி பாய்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. இதனால் பத்தமடை பாய்களுக்கு தனித்துவமான தரமும், சிறப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக தாமிரபரணி ஆற்றங்கரையோர சோலைக்காடுகள் அழிக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் இயற்கையாக வளரும் கோரைப்புல் கிடைப்பது குறைந்துள்ளது. இதனால் பத்தமடை நெசவாளர்கள் தஞ்சாவூர் மாவட்ட காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயிகளால் பயிரிடப்படும் கோரைப்புல்லை வாங்கி வந்து பாய்களை நெய்து வருகின்றனர்.

இந்த நிலையில், எல்-நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக காவிரி பாசனப் பகுதிகளில் கோரைப்புல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பயிரிடப்பட்டிருந்த கோரைப்புல்லும் வறட்சியால் கருகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மூலப்பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கோரைப்புல் விலை சுமார் 65 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சாயப்பொடி மற்றும் நூல் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் பாய் உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட பட்டுப்பாய் தற்போது ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் பாய்கள் ரூ.100 முதல் ரூ.550 வரையிலும், பட்டுப்பாய்கள் ரூ.1,700 முதல் ரூ.13 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள உயர்தர பட்டுப்பாய் ஒன்றை தயாரிக்க சுமார் 45 நாட்கள் வரை ஆகிறது. இருப்பினும், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை என்பதால் பலரும் பட்டுப்பாய் தயாரிப்பை கைவிட்டுள்ளனர்.

இதுகுறித்து பத்தமடையை சேர்ந்த 5-வது தலைமுறை பாய் உற்பத்தியாளர் சுலைமான் கூறியதாவது:-

நான் இந்த தொழிலில் 5-வது தலைமுறையாக ஈடுபட்டு வருகிறேன். சமீபகாலமாக மூலப்பொருட்களின் விலை உயர்வால் பாய் நெசவுத் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. கோரைப்புல், சாயப்பொடி, நூல் உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

கோரைப்புல் பெரிய பண்டல் ஒன்று முன்பு ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை ரூ.2,500 ஆக உயர்ந்துள்ளது. சாயப்பொடி கிலோ ரூ.900-ல் இருந்து ரூ.1,350 ஆகவும், நூல் விலை ரூ.160-ல் இருந்து ரூ.240 ஆகவும் அதிகரித்துள்ளது.

காவிரி பாசனப் பகுதிகளில் கோரைப்புல் சரியாக விளையவில்லை. ஏற்கெனவே பயிரிடப்பட்டிருந்த கோரைப்புல்லும் வறட்சியால் கருகிவிட்டது. இதனால் மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட பட்டுப்பாயை தற்போது ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கும் அதிக கூலி கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களும் அதிக விலை கொடுத்து பாய் வாங்க வேண்டியுள்ளது.

முன்பு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இயற்கையாக விளைந்த நாட்டு கோரைப்புல் அதிக அளவில் கிடைத்தது. தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் அந்த கோரைப்புல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயிகள் பயிரிடும் கோரைப்புல்லை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

பத்தமடை பாய்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தாலும், மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக தேவையான அளவுக்கு உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆரம்பத்தில் 300 குடும்பத்தினர் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது 35 குடும்பத்தினர் மட்டுமே இந்த தொழிலை செய்து வருகின்றனர்.

எனவே, அரசு நலவாரியம் மூலம் பாய் நெசவாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, பாரம்பரிய தொழிலை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக அளவில் தனி அடையாளம் பெற்றுள்ள பத்தமடை பாய் நெசவுத் தொழில், தற்போது மூலப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வால் அழிவின் விளிம்புக்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பாரம்பரிய தொழிலை பாதுகாக்கவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *