November 5, 2026

Seithi Saral

Tamil News Channel

அம்பை தொகுதியில் சீமானுக்கு ஆதரவு கிடையாது: டி.கே.எஸ்.இளங்கோவன் திட்டவட்டம்

1 min read

No support for Seeman in the Ambasamudram constituency: T.K.S. Elangovan asserts firmly

5.11.2026
தமிழகத்தில் காலியாக உள்ள பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் 5 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிடும் என்றும், அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இல்லை என்றும் தி.மு.க. செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 2 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. தி.மு.க. 2-வது இடத்தையும், அ.தி.மு.க. 3-வது இடத்தையும் பிடித்தன.

இந்த நிலையில், எஞ்சியுள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. இதற்கான தேர்தல் அறிவிப்பை தீபாவளி பண்டிகைக்கு பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக வரும் டிசம்பர் 20-ந்தேதிக்குள் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தால் அதை ஏற்றுக்கொள்வேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். பசும்பொன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், இடைத்தேர்தலில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “பசியோடு இருப்பவனுக்கு பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல அவன் என்ன பைத்தியக்காரனா? அவர்கள் ஆதரவு தந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்வோம்” என்றார்.

மேலும், இந்த ஆதரவை தேர்தல் நேரத்து ஆதரவாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், இதை அரசியல் கூட்டணியாக கருதக்கூடாது என்றும் அவர் விளக்கம் அளித்தார். சட்டமன்றத்தில் தனது குரல் ஒலிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புவதாகவும், தன்னை சட்டமன்ற உறுப்பினராக பார்க்க மக்கள் ஆசைப்படுவதால் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் சீமான் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, சீமானுக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா? என்று தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இடைத்தேர்தல் தேதி முதலில் அறிவிக்கப்படட்டும். அதன் பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து தி.மு.க. செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தி.மு.க. குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றியை தவறவிட்டது. எனவே, அடுத்ததாக நடைபெற உள்ள 5 தொகுதி இடைத்தேர்தல்களிலும் தி.மு.க.தான் போட்டியிடும். இந்த தேர்தல்களில் எங்களுக்கு வெற்றி கிடைப்பது உறுதி.

தற்போதைய ஆட்சியில் முதல்-அமைச்சர் விஜய்க்கு நிர்வாகத் திறமை இல்லை என்பது மக்களுக்கு வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அவரால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டம்-ஒழுங்கும் மோசமடைந்துள்ளது. எனவே, இந்த பிரச்சினைகள் 5 தொகுதி இடைத்தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.

சீமானைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்துக்கு எதிராக கட்சியை தொடங்கி, தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். எனவே, அம்பாசமுத்திரம் தொகுதியில் அவருக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு இல்லை. எங்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்போது, நாங்கள் ஏன் சீமானை ஆதரிக்க வேண்டும்?

இவ்வாறு அவர் கூறினார்.

5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில், அவருக்கு தி.மு.க. ஆதரவு அளிக்காது என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *