November 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பற்றி அறிக்கை தாக்கல் செய்ய கவர்னருக்கு மத்திய அரசு உத்தரவு

1 min read

Central government directs the Governor to submit a report on law and order in Tamil Nadu

11.11.2026
தமிழகத்தில் நடைபெற்று வரும் த.வெ.க. ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு நிலைமை எப்படி இருக்கிறது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கவர்னர் அர்லேகருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாகவும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இது தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பியுள்ள நிலையில், மத்திய மந்திரி அமித்ஷாவின் உள்துறை தமிழக கவர்னர் விஸ்வநாத் அர்லேகரிடம் அறிக்கை கேட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்துறை உள்ளது. இந்த நிலையில், தீபாவளி நாளில் தமிழகத்தில் அதிக கொலை நடந்துள்ளதுடன், பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட தேனியை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் (வயது 56) கொலை செய்யப்பட்ட சம்பவம், போலீசாருக்கே பாதுகாப்பு இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த தமிழக அரசும், காவல் துறையும், தீபாவளி நாளில் 8 கொலைகள் மட்டுமே நடந்ததாக விளக்கம் அளித்தது. என்றாலும், “முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதில் தோல்வியடைந்துவிட்டது” என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான முக ஸ்டாலின், ”சட்டம் – ஒழுங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. நிர்வாகம் கோமா நிலையில் உள்ளது” என கடுமையாக சாடினார்.

இந்த நிலையில்தான் தமிழக சட்ட, ஒழுங்கு நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக கவர்னர் விஸ்வநாத் அர்லேகரிடம் அறிக்கை கேட்டுள்ளது. அதில், சமீப காலமாக தமிழகத்தில் நிகழ்ந்துள்ள வன்முறை சம்பவங்கள் குறித்தும், பொது அமைதியை பேண மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் மதிப்பீடு செய்து வழங்குமாறு கோரியுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தின் நிலவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனிக்க தொடங்கியிருப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் அடிப்படையிலேயே தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக ரவுடிகள் வேட்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. என்றாலும், மத்திய உள்துறை வசம் தமிழக கவர்னர் அளிக்கப்போகும் அறிக்கையை பொருத்தே அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் இருக்கும். இதற்கிடையே தமிழக கவர்னர் அர்லேகர் நாளை மறுநாள் (நவ.13) டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *