டாஸ்மாக் பணம் ரூ.1.50 கோடி கொள்ளை -காருடன் கடத்தல்
1 min read
Rs. 1.50 crore in TASMAC cash looted – stolen along with the car
11.11.2026
டாஸ்மாக் கடைகளில் வசூலான ரூ.1.50 கோடி பணத்தை காருடன் கடத்திச் சென்ற மர்ம கும்பல், பின்னர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகளில் வசூலாகும் பணம் தனியார் ஏஜென்சி நிறுவனம் மூலம் சேகரிக்கப்பட்டு, டாஸ்மாக் அலுவலகத்தில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனியார் நிறுவனத்தின் சார்பில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், நேற்று இரவு சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணம் வசூலிக்கும் பணியில் தனியார் நிறுவன ஊழியர் தாஸ் ஈடுபட்டிருந்தார். அவருடன் கார் டிரைவர் அபீப் சென்றார்.
இரவு 10 மணியளவில் 22 டாஸ்மாக் கடைகளில் வசூலான மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சம் பணத்தை பையில் வைத்துக்கொண்டு, ஒரகடம் மேம்பாலம் அருகே உள்ள மற்றொரு டாஸ்மாக் கடைக்குச் சென்றனர்.
மதுக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு தாஸ் மட்டும் கடைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கார் டிரைவர் அபீப் மட்டும் காரில் இருந்தார். காருக்குள் ரூ.1.50 கோடி பணம் இருந்தது.
அந்த நேரத்தில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென காரின் மீது மோதினர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் அபீப், அவர்களைக் கண்டித்தார். இதையடுத்து 3 பேரும் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட 2 வாலிபர்கள் திடீரென காரை ஓட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பினர். மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் டிரைவர் அபீப் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக ஊழியர் தாசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து ஒரகடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன், ஒரகடம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, கொள்ளையர்கள் படப்பை அருகே உள்ள காரணித்தாங்கல் பகுதியில் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, அதில் இருந்த ரூ.1.50 கோடி பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கடத்தப்பட்ட காரை மீட்டனர். காரில் பதிவாகியிருந்த கைரேகைகளைப் பதிவு செய்து, தடயங்களையும் சேகரித்தனர்.
இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளை நடந்த இடம் மற்றும் கார் நிறுத்தப்பட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். டாஸ்மாக் பணம் வசூலிக்கும் ஊழியர்களை பல நாட்களாகக் கண்காணித்து, அவர்கள் செல்லும் வழித்தடங்களை அறிந்து இந்தக் கொள்ளையை அரங்கேற்றியிருக்கலாம் எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனால், ஏற்கனவே பணம் வசூலிக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பணம் வசூலில் ஈடுபட்ட ஊழியர் தாஸ் மற்றும் கார் டிரைவர் அபீப் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் பணம் ரூ.1.50 கோடியை சினிமா பாணியில் மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.